9வது தேசிய சாரணர் ஐம்போறியினை, யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 04.30 அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சாரணிய மாணவர்களின் சாரணிய கௌரவத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் சாரணிய மகுட வாக்கியத்தினை வாசித்து சாரணிய ஐம்போறியினை ஆரம்பித்து வைத்தார்.
இங்கு உரையாற்றிய வடக்கு முதல்வர் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டிய உரித்துக்களைக் கொடுங்கள், அதற்குப் பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டுமென தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை முழுவதிலும் இருந்து சாரணியர்களை அழைத்து வந்து நிகழ்வினை நடாத்துவது முக்கியமான நேரம். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்துள்ள இளம் சாரணியர்கள் ஒன்றிணைந்து எதையும் சாதிக்க முடியுமென்று என்று எடுத்துக்காட்டும் வகையில் சாரணியர் பாசறை நடைபெறுகின்றது.
எமது சகல மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை கட்டி எழுப்ப வேண்டுமாயின், சாரணியத்தின் குறிக்கோள்கள் எமக்கு முக்கியமானது.
ஆனால் அண்மையில் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். கலப்புத் திருமணங்கள் மிகவும் அவசியமென்று, கலப்பு திருமணத்தினை எதிர்ப்பவன் அல்ல. எனது இரு மகன்களும் சிங்கள பெண்களையே திருமணம் செய்துள்ளார்கள்.
தமிழ் மக்களுடைய உரித்துக்களைக் கொடுங்கள். சட்ட பூர்வமாக கொடுக்க வேண்டியவற்றினைக் கொடுங்கள். அதன்பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டும் என்றார்.