முதலில் இருப்பதைக் கொண்டு சிறப்பாக இயங்குங்கள்! வடமாகாண சபைக்கு பீரிஸ் ஆலோசனை

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றில் 80 வீதமானவற்றை அரசு ஏற்றுக்கொண்டது. எனினும், அவற்றுக்கு எதிராகவும் அரச கூட்டணிக்குள் பிரச்சினைகள் எழத்தான் செய்தன. இதனால்தான் இவை குறித்து பொதுக் களத்தில் கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாகாண சபைகளும் அதிகாரங்களை முழுமையாகப் பெற்றிருக்கவில்லை. அந்த வகையில், வடமாகாணத்திற்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தி முன்நோக்கிச்செல்வதே சிறந்தது. மாறாக இருக்கும் அதிகாரங்களை விடுத்து, “ஒன்றுமே இல்லை… இல்லை எனக் கூறுவது பொருத்தமற்றச் செயலாகும்.” – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.

gl peris

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வெளிவிவகார அமைச்சின் சேவைகள் தொடர்பில் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் அநுர குமார திஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் இச்சபையில் குறைத்து மதிப்பிட்டு அவமானமாக உரையாற்றினார்கள். இது கவலைக்குரிய விடயமாகும். மனித உரிமைகள் தொடர்பாக இன்று பேசுபவர்கள் அன்று விடுதலைப் புலிகள் காலத்தில் பேசினார்களா? புலிகளுக்கு எதிராகப் பிரேரணைகளைக் கொண்டுவந்தார்களா? யுத்தம் இடம்பெற்றபோது அதனை நிறுத்த பிரிட்டன் உட்பட பல நாடுகள் முயற்சித்தன. ஆனால், ஜனாதிபதி அவற்றை நிராகரித்தார். பிரிட்டன் அதிகாரி ஒருவர் ஜனாதிபதியைச் சந்திக்க வந்தார். சீனா நட்புறவு நாடு. அதனோடு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைச் செய்யவுள்ளோம். இந்தியாவுடனும் இவ்வாறான உடன்படிக்கையைச் செய்துகொள்ள உத்தேசித்துள்ளோம். இம்மாத இறுதியில் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார். இதன்மூலம் நாட்டிற்கு பல நன்மைகள் கிடைக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எமக்கெதிரான பிரேரணையில் உள்ளூர் விசாரணையை வலியுறுத்தப்பட்டுள்ள அதேசமயம் சர்வதேச விசாரணை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் எதிர்க்கின்றோம். காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவிற்கு உலகம் ஏற்றுக்கொண்ட திறமை வாய்ந்த நிபுணர்கள் ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் விசாரணைகளை நடத்தமாட்டார்கள். எனவே, இது ஒரு தேசிய விசாரணை. சர்வதேச விசாரணையல்ல. எமது ஆணைக்குழு செயற்பாட்டுத் திறன்மிக்கது என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவி கிடைத்தமை எமது நாட் டுக்கு கிடைத்த கெளரவமாகும். பொருளாதார முதலீடுகளை முதன்மைப்படுத்தியதாகவே எமது இராஜதந்திர வெளிநாட்டு முதலீடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக வெளிநாட்டிலுள்ள தூதுவர்கள் பாரிய அர்ப்பணிப்பைச் செய்கின்றனர்.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளுடன் எமக்கு சிறப்பான உறவுகள் முன்னர் இருக்கவில்லை. ஜனாதிபதி பலஸ்தீனின் நண்பர். ஜனாதிபதியின் பெயரில் பலஸ்தீன தலைநகரில் ஒரு வீதி இருக்கின்றது. இந்தியா, இலங்கைக்கு இடையே பிரச்சினைகள் உள்ளன. ஆனால், நட்புறவு பழுதுபடாது.பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதில் புதுடில்லியும் இலங்கையும் புரிந்துணர்வுடனேயே செயற்படுகின்றன. பிழைகள் இடம்பெற்றிருந்தால் அதற்காகக் கவலை தெரிவிக்கின்றோம். ஒருபோதும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் வீழ்ச்சி ஏற்படாது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் எனக்கும் தெரியும். ஜனாதிபதி இந்தியா சென்றபோது முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டது. வடமாகாணசபைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், எதுவும் இல்லை எனக் கூறிக்கொண்டிருப்பதைவிடுத்து தற்போதுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி முன்னேற்றங்களைக் காண வேண்டும்.

அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுகளில ஓரளவு முன்னேற்றம் காணவேண்டும். அந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தவேண்டும். தனித்து இரண்டு கட்சிகள் பேசுவதைவிடுத்து பலம்கொண்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து பேசவேண்டும். கூட்டாக பிரச்சினைகளை ஆராயும்போது பல்வேறு கருத்துகள் தலைதூக்கும். அவற்றை பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியும்” – என்றார்.

Related Posts