யாழ். மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபராகப் பதவியேற்று, மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து சேவை செய்து மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்று, தேசிய விருதுகளை வென்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்.இவ்வாறு திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், கணக்காளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், சிற்றூழியர்கள் அனைவரும் அவரை நேற்றுப் பாராட்டி வாழ்த்தினர்.
யாழ். மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச அதிபரின் பிரியாவிடை வைபவம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலர்கள் மாவட்ட செயலக திணைக்களத் தலைவர்கள், கணக்காளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் சவால் நிறைந்த மாவட்டமாக விளங்கிய போதும், ஒரு பெண்ணாகப் பதவியேற்று, பெண்களுக் கெதிரான வன்முறைக்காகக் குரல் கொடுத்ததுடன் அவர்களைத் தலை நிமிரச் செய்தவர் திருமதி இமெல்டா சுகுமார். அத்துடன் சகல மக்களையும் வேறுபாடு காட்டாது தனது சேவையால் அரவணைத்தவர் என்று அவரை அனைவரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
இந்த வாழ்த்துரைகளுக்குப் பின்னர் அரச அதிபர் திருமதி இமெல்டா ஏற்புரை நிகழ்த்தினார்.
அவர் தனதுரையில் தெரிவித்ததாவது:
யாழ். மாவட்டத்தில் இதுவரை சாதித்ததை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். சகல அலுவலர்களதும் அனுசரணையுடன் தான் என்னால் இதனைச் செய்ய முடிந்தது.
எல்லோரும் ஏன் இந்தத் திடீர் இடமாற்றம் என்று கேட்கின்றனர். என் வாயாலே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த இடமாற்றம் வரும் என்று நான் முன்னரே கணிப்பீடு செய்திருந்தேன்.
அரசியல் செல்வாக்குள்ளவர்கள் சௌகரியமான இடத்திலிருந்து சேவையாற்ற முடியும். 1984 ஆம் ஆண்டில் நான் அரச சேவைக்கு செல்லும்போதே இடமாற்றத்துக்கு தயாராகவே வந்தேன் .எனது தற்போதைய இட மாற்றம் ஜனாதிபதி மட்டத்திலேயே எடுக்கப்பட்டதாக அமைச் சின் செயலர் கூறினார். இந்த இடமாற்றப் பின்னணியில் அரசியல், ஆளுநரின் சம்பவங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மக்களும் என்னை மறக்க மாட்டார்கள். நான் எனது மக்களுக்கு சேவையாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. அரசின் கொள்கைகளை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தேன்.
நான் பதவி உயர்வு கேட்கவில்லை. எனது மக்களுக்காகவே சேவையாற்றினேன். நான் இந்த மாவட்டத்தில் பதவி ஏற்கும் பொழுது 250 குடும்பங்களையே மீளக்குடியமர்த்தியிருந்தனர். இப்போது 37 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளேன்.
மக்களுக்குச் சேவை செய்யும், மக்கள் நாடிவரும் புனிதமான பணியில் இருப்பதனால், மக்களை அலைக்கழிக்காமல் நீங்களும் சேவையாற்ற வேண்டும் என்றார்