முதலாம் தவணக்காக பாடசாலைகள் ஜனவரி 11இல் ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உள்பட மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் 2021 ஜனவரி 11ஆம் திகதி முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

அன்றிலிருந்து தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிறுவனங்கள் ஜனவரி 11 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டினார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்ததாவது;

கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இடையே நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் நிலவும் சுகாதார நிலமைகள் மற்றும் மேல் மாகாணத்தின் பாடசாலைகள் திறக்கப்படுவது ஆகியவை ஒவ்வொரு 10 நாள்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும்.

பாடசாலை மாணவர்களது ஆரோக்கியம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டப்படும்.

பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளைத் திறப்பது தொடர்பான முடிவு மேலும் பரிசீலிக்கப்படும்.

ஆனால் பாடசாலை விடுதிகளில் உள்ள உணவகங்கள் சமூக இடைவெளியைப் பாதுகாக்கும் வகையில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

எந்தவொரு மாணவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது ஒரு வீட்டுக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருந்தால் அத்தகைய வீடுகளில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதிருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் – என்றார்.

Related Posts