முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே அன்றி கட்சிகள் அல்ல – நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு தவராசா பதில்

thavarasaவடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். இவையே இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எங்களது வேட்பாளர் தொடர்பான அந்தஸ்தாகும்.

அந்த சம அந்தஸ்தின் அடிப்படையிலும், நீங்கள் ஒரு நாகரீக அரசியல் பிரசாரத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலுமே உங்களை ஒரே மேடையில் இருவரும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள அழைப்பு விடுத்திருந்தேன்.

நாம் எதை விரும்பினாலும் முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே அன்றி கட்சிகள் அல்ல என ஐ.ம.சு. முன்னணியின் முதன்மை வேட்பாளரான சி. தவராசா நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

நான் தங்களுக்கு 28.08.2013 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் பொது மேடை ஒன்றில் உங்கள் கருத்தையும் எனது கருத்தையும் எடுத்துச் சொல்வதற்கு வருமாறு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தேன்.

அதற்கு நீங்கள் பதிலளித்திருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டேன். நான் இக்கடிதத்தை எழுதும் வரை உங்கள் பதில் எனக்கு கிடைக்காத போதிலும், ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். இவையே இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எங்களது வேட்பாளர் தொடர்பான அந்தஸ்தாகும்.

அந்த சம அந்தஸ்தின் அடிப்படையிலும், நீங்கள் ஒரு நாகரீக அரசியல் பிரசாரத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலுமே உங்களை ஒரே மேடையில் இருவரும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள அழைப்பு விடுத்திருந்தேன்.

ஐயா, நான் ஒரே மேடையில் விவாதிக்கவோ, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவோ உங்களை அழைக்கவில்லை. நாகரீகமாகவும், பண்பாகவும் இருவரும் தத்தமது கருத்துக்களை இடையூறுகளின்றி தெரிவிக்கும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றிற்கு வித்திடவே அழைத்திருந்தேன்.

நாம் எதை விரும்பினாலும் முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே அன்றி கட்சிகள் அல்ல.

தமிழரசுக் கட்சியினர், அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காலம் காலமாக நழுவல் அரசியலையே செய்து வந்துள்ளனர். அதாவது எந்தவொரு பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டாலும் அதை சரி, பிழைகள் பாராமலே தட்டிக்கழித்துவிட்டு, அது சரிவராது என்றும், ‘அதனால் பிரயோசனம் இல்லை’ என்றும் கூறுவது வழமை. நீங்களும் அதே சம்பிரதாயத்தில் நடக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே உங்களுக்கு ஓர் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு முன்வரும் வண்ணம் அழைப்பு விடுத்திருந்தேன்.

அத்துடன் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் உங்களுக்கு விடுத்த அழைப்பு குறித்து கூட்டமைப்பு பா.உ. ஒருவர் அண்மையில் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களுடன் பத்திரிகையாளர் மகாநாடொன்றில் பதிலளித்திருப்பது உங்களின் தரத்திற்கு நல்லதல்ல.

அவ்வாறான பதில், ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருக்கும், ஒரு குடம் விஷத்துக்குள் ஒரு துளி பாலாக நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்ற கூற்றை மீண்டும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.

அத்தகையவர்களுக்கு, அவர்களுக்கு புரியும் வகையில் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். அவர்களிடம் நாகரீகத்தையோ உண்மையையோ எதிர்பார்க்கவில்லை.

எனது கொள்கையிலும் கருத்திலும் நான் உறுதியாக இருப்பதால் உங்களுக்கான அழைப்பை மனப்பூர்வமாகவே விடுத்தேன்.

நீங்களும் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் மக்களுக்கு எங்கள் கருத்துக்களை பொது மேடையொன்றில் நின்று கூறுவதற்கு நீங்கள் தயக்கம் காட்ட மாட்டீர்கள் என நான் முழுமையாக நம்புகின்றேன்.

எனது இக்கோரிக்கைக்கு இணங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விரைவான உங்கள் பதிலை எதிர்பார்த்து நிற்கிறேன்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்படைய செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன் – சி.வி.விக்னேஸ்வரன்

உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு ஐ.ம.சு.மு. முதன்மை வேட்பாளர் அழைப்பு

Related Posts