முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறப்பாக தேர்வு செய்யத் தவறிவிட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த வருடத்தில் எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வேலை திட்டம் இன்னமும் முடிக்கப்படாத நிலையில் உள்ளது. இந்த செயற்பாடானது எனது நன்மதிப்பை கெடுக்கும் விடயமாகவே நான் கருதுகிறேன்.
ஏனைய உறுப்பினர்களுடைய வேலை திட்டங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் என்னுடைய வேலை திட்டம் மாத்திரம் முடிக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் விசாரித்து அறிய வேண்டும்.
அமைச்சர்களால் அதிகாரிகளை கொண்டு வேலை வாங்க முடியவில்லை என்றால் அதிகாரிகளை மாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை என தியாகராஜா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் முகமாக வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் கருத்து தெரிவித்தபோது, ஒதுக்கீட்டிற்கான வேலை திட்டங்கள் தொடர்பில் கடந்த 2 மாதங்களில் 3 தடவைகள் அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறோம். அதன்போது அனைத்து வேலைத்திட்டங்களும் முடிக்கப்பட்டு விட்டதாகவே தெரிவித்தனர்.
உறுப்பினரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, “உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் உரிய முறையில் கொடுக்கப்படவில்லை எனவும் , பயனாளிகள் கேட்கும் பொருளை கொள்வனவு செய்து கொடுக்காது, தாம் சொல்லும் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக பயனாளிகள் தன்னிடம் முறையிட்டு உள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.