வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்களை சபையில் நிறைவேற்றுவது தொடர்பிலான வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிநியதிச் சட்டத்திற்கு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிக்கப்போவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குறிப்பிட்டார்.
இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை ஏற்றுக்கொள்வதாக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், முன்மொழிய அதனை ஏற்றுக்கொள்வதாக ஆளுங்கட்சி உறுப்பினர் அஸ்மின் ஆயுப் வழிமொழிந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நிறைவேறியது. வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.
இதன்போது, வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச் சட்டம், முத்திரை வரிக் கைமாற்றல் நியதிச்சட்டம் மற்றும் முதலமைச்சர் நிதிநியதிச் சட்டம் என்பன நிறைவேற்றுவது தொடர்பில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் விவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது, நிதிநியதிச் சட்டமும், முத்திரை கைமாற்றல் நியதிச் சட்டமும் வடமாகாண சபை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், முதலமைச்சர் நிதிநியதிச் சட்டம், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்கட்சித் தலைவர் தவராசா அதனை ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்தார்.
முதலமைச்சர் நியதிச்சட்டம் ஆளுநரின் சிபார்சுக்கு அனுப்பத் தேவையில்லை என்ற போதும், ஏன் அதனை ஆளநரின் சிபார்சுக்கு அனுப்பி வைத்தீர்கள். அனுப்பாமல் உங்களுக்குள்ள உரித்துக்களைக் கொண்டு அதனை நிறைவேற்றியிருக்க முடியுமே என்ம் தவராசா கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ‘நாங்கள் ஆளுநருக்குப் பயந்து அதனை அனுப்பவில்லை. நாங்கள் செய்பவற்றை ஒழிவுமறைவு இல்லாமல் அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அனுப்பியிருந்தோம்.
எனினும், அதனைக் கருத்திற் கொள்ளாமல், வடமாகாண சபையினை முடக்க வேண்டும் என்ற நோக்குடல் நியதிச் சட்டங்களில் குறைகள் கண்டுபிடித்து அதில் மாற்றங்கள் செய்யும்படி கூறியுள்ளார். அவ்வளவு தான். இதில் நீங்கள் குறைகூறுவதற்கு எதுவும் இல்லை. குறித்த நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படும் வேளையில் நீங்களும் உடனிருந்தீர்கள் தற்போது ஏன் எதிர்க்கின்றீர்கள் என கேள்வியெழுப்பினார்.
இதனையடுத்து, முதலமைச்சர் நியதிச்சட்டம் வாக்கெடுப்பிற்கு விடுவதென அவைத்தலைவர் தீர்மானித்தார். அதன்போது, தங்கள் கட்சியினுடன் ஆலோசனை செய்த பின்னரே வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியும் என்றும், ஆகவே தற்போது வாக்கெடுப்பு நடைபெற்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடுநிலை வகிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சர் நிதி நியதிச் சட்டமும் சபையில் நிறைவேறியது.