வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டே வடமாகாண சபையின் அரசியலை அரங்கேற்றுவதாக, சிலர் முன்வைத்து வருகின்ற விமர்சனங்களை மறுப்பதாக, வடமாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘வடக்கு முதல்வர், ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல. முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர் கரிசனையுடன் செயற்படுகின்றார் என்பதற்கு பல உதாரணங்களை என்னால் முன்வைக்க முடியும். வடமாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்பு அதிகளவான காணி உறுதி பத்திரங்களை வடக்கு முஸ்லிம்களுக்கு, குறிப்பாக வன்னி மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
வவுனியா – சாளம்பைக்குளம் கிராமத்தில், சுமார் 272 குடும்பங்களுக்கும் செட்டிகுளம், சூடுவெந்தபுலவு, பாவற்குளம் போன்ற பிரதேசங்களில் 133 குடும்பங்களுக்கும் மன்னார் மாவட்டத்தின் முசலி – மருதமடுவில் 210 குடும்பங்களுக்கும் வேப்பங்குளத்தில் 348 குடும்பங்களுக்கும், கரடிக்குளியில் 424 குடும்பங்களுக்கும், பாலைக்குளி கிராமத்தில் 238 குடும்பங்களுக்கும், ஏனைய பிரதேசங்களில் குறிப்பிட்ட தொகையினரும் உள்ளடங்களாக 3000க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தத்தம் காணியுறுதிகளை பெற்றுக்கொள்ள, வடமாகாணசபை மேற்கொண்ட பிரயத்தனம் தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
அபிவிருத்தி செயற்பாடுகளிலும் வடமாகாண சபையோ வடக்கு முதல்வரோ முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை என்பதற்கு சான்றாக சென்ற வருடம் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய உட்கட்டமைப்பு விருத்திக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி அதன் வேலைகள் முடியும் தருவாய்க்கு வந்துள்ளது. மேலும் முதலமைச்சரின் பணிப்பின்பேரில் வீதி அபிவிருத்திக்காக போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் 60 இலட்சம் ரூபாயை ஒதுக்கி அவ்வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
மீள்குடியேரும் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவில் முஸ்லிம்களுக்கான பங்கு சமமானதாக இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் பணிப்பினை நினைவு கூறுகிறேன். உண்மையில் சிறுபான்மை சமூகத்துக்கான அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளும் போது அது முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துபவர் வட மாகாண முதலமைச்சர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற மாபெரும் மக்கள் இயக்கங்கள் இணைந்து உருவாக்கியிருக்கின்ற சகோதரத்துவ அரசியலை பொருத்துக்கொள்ள முடியாத, தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைப்பதன் மூலம் தனது அரசியலை நிலை நாட்ட துடிக்கின்ற ஒரு மத்திய அமைச்சரும் அவரது கட்சி உறுப்பினர்களுமே வடக்கு முதல்வருக்கெதிரான பிரசாரங்களை அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.
வடபுல முஸ்லிம்கள் இப் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. அத்துடன், எனது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தனுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு மிக்க தூர நோக்குடைய அரசியல்தொடர்பும் இருந்து வரும் நிலையில் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாத விடயங்களில் தமிழ் கூட்டமைப்புடன் ஒரு நட்புறவு அரசியலையே தலைவர் ரவூப் ஹகீமின் வழி காட்டலில் செய்து வருகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மீன், ஜவாஹீர் ஜனூபர் ஆகியோர் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித சேவையும் முதலமைச்சர் செய்யவில்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.