வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
டெனிஸ்வரனின் அமைச்சுப் பதவி தொடர்பாக விவாதிப்பதற்காக, வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிமன்ற கட்டளை நிறைவேற்றப்படாவிடின், அந்த கட்டளையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்ற நடவடிக்கைகள் சில தினங்களில் வரும். அவ்வாறு அமைச்சுப் பதவி கிடைக்கும் போது, அந்த பதவியை தியாகம் செய்வதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
சாதாரண ஒருவர் முதலமைச்சராக வந்து இந்த தவறினைச் செய்திருந்தால் மன்னித்திருக்க முடியும். ஆனால், ஓய்வுபெற்ற நீதியரசரான அவர், தன்னிடம் வந்த முறைப்பாட்டினை சரியாக விசாரிக்காமல் விட்டதே இந்த பிரச்சினை எழுவதற்கு காரணமாக அமைந்ததென அவர் மேலும் குறிப்பிட்டார்.
6 அமைச்சர்கள் இருப்பதனால், அரசியலமைப்பிற்கு புறம்பாக அமைச்சுப் பதவியில் இணைய முடியாது. அரசியலமைப்பின் பிரகாரமே அமைச்சுப் பதவியில் இணைய முடியும். ஒரு நீதியரசர் இடைக்கால கட்டளையை சரியாக பார்த்திருக்க வேண்டுமென டெனிஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் ஒரு நீதியரசர் என்ற அடிப்படையில் தீர்ப்பில் பிழை ஏற்படாது என்றால்கூட அதனை அமுல்படுத்திக் கொண்டு, மேன்முறையீட்டுக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், காலத்தினை இழுத்தடிப்பதற்காக இவ்வாறான நடவடிக்கையில் முதலமைச்சர் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
13ஆவது திருத்தச் சட்டத்தினை சரியாக புரிந்துகொள்ளாமல் இவ்வளவு காலமும் ஆட்சி செய்தோமா என்று கேள்வி எழுப்பியதுடன், தம்மை வழிநடத்த வேண்டிய முதலமைச்சர் தவறிழைத்துள்ளமைதான் வேதனைக்குரிய விடயம் என்றும் கூறினார்.
மேலும் தான் செய்தது சரி என்பதனை காட்டுவதற்காக தொடர்ச்சியாக முதலமைச்சர் பிழைகளை விட்டுக்கொண்டிருக்கின்றாரே தவிர அவற்றினை சரிசெய்வதற்கு முனையவில்லை. தான் விட்டது பிழை என முதலமைச்சர் ஏற்றுக்கொள்வாராயின் அமைச்சுப் பதவியை விடுவேன் என தெரிவித்திருந்தார்.