முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை திரும்ப பெறப்பட்டது

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக, கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

வடமாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த நால்வரில் இருவரை, அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் வடமாகாண சபையில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. எனினும், கடந்த வியாழக்கிழமை இரவே, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடாத ஏனைய உறுப்பினர்கள், கைச்சாத்திட்டு நம்பிக்கை பிரேரணையை கையளித்தனர்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம், தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டிருந்த நிலையிலேயே, மேற்கொள்ளப்பட்ட துரித பேச்சுவார்த்தைகள் காரணமாக, அந்தப் பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன்முன்னதாக கடிதம் அனுப்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன்,
வட மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்துக்கு நன்றி
நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

மேலும், மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த விடயம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட் திரு. வணபிதா. ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்க கூடாது என்பதை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான் தற்போது தொலைபேசியில், வட மாகாண ஆளுநரைத் தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் எனத் தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன். எல்லாம் நலமாகவே அமையட்டும்.

நாம் வெகுவிரைவில் சந்தித்ததுப் பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts