முதலமைச்சர் தங்களின் கைப்பாவையாக தொழிற்படுவார் என்றே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கமும் நம்பியிருந்தது. ஆனால் அவர் இங்கே வந்த பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரைத் தினம் தினம் சந்திக்கச் சந்திக்க மக்களின் வலியை உணர்ந்தவராகத் தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாடுடையவராக மாறினார். இதனால் அவரைப் பதவியிலிருந்து அகற்ற விரும்பிய அவர்கள்இ அவர் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்களையோ இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களையோ வைத்திருந்தால் மக்கள் நம்பமாட்டார்கள் என்பதால் அவரைப் பதவி கவிழ்க்கும் சதியின் முதற்கட்டமாக என்னைக் குறி வைத்தார்கள் என்று அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிரானவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஐங்கரநேசன் இது தொடர்பாக அவரது பசுமை இயக்க உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தன்னிலை விளக்கம் அளிக்கும் மக்கள் மன்றம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். நேற்று (25.06.2017 )நல்லுார் இளங்கலைஞர் மன்றத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும் போதுஇ முதலமைச்சர் அமைத்த விசாரணைக்குழுவில் அங்கம் வகித்த 3 பேரில் ஒருவர் மோசடிக் குற்றச்சாட்டுக்காக சிறைக்கு சென்றவர். இன்னுமொருவர் முஸ்லீம்களின் காணி உறுதிகளை கள்ளக்கையெழுத்தி்ட்டு உறுதி மாற்றம் செய்வதற்கு துணைபுரிந்தவர். அந்த விசாரணைக்குழு சோரம் போன விசாரணைக்குழு. என்மீது சுமத்தப்பட குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக விசாரித்துஇ என்மீது குற்றம் இல்லை என்றும் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதாகவும் குறிப்பிட்டுவிட்டு இறுதியில் முன்கூட்டியே வைத்திருந்த தீர்மானத்துக்கு அமைவாக என்னைப் பதவியிலிருந்து விலகுமாறு எழுதி வைத்துள்ளார்கள்.
மாகாண அமைச்சருக்கு சுற்றுச்சூழல் சார்ந்து எந்தவித அதிகாரமும் தரப்படாத நிலையில் நான் செயற்பட்ட எல்லாவற்றையும் அதிகார மீறல்களாகவே கூறுகின்றார்கள் மத்திய அரசாங்கம் தனியாக மரநடுகை திட்டம் ஒன்றை முன்னெடுக்கும்போது மாகாண அமைச்சுக்கு கார்த்திகை மாதத்தில் தனியான மரநடுகைத் திட்டம் எதற்காக? எனவும் அவர்கள் கேட்கின்றார்கள்.
இராமன் கேட்டால் சீதை தீக்குளிக்கலாம். ஆனால் வாலிகள் கேட்கிறார்கள் என்பதற்காக தீக்குளிக்க முடியாது. மற்றவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் என்னை சார்ந்த உங்களுக்கு மாகாணசபையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது எனவும் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வட மாகாண உறுப்பினர் விந்தன் கனகரட்ணமும் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ம.கஜேந்திரனும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது