வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி நேற்றைய தினம் (புதன்கிழமை) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதன்படி, தமிழரசு கட்சியின் வடமராட்சி தேர்தல் தொகுதியின் உறுப்பினர்களான சுகிர்தன், சிவயோகன், தர்மலிங்கம் ஆகியோரும் தென்மராட்சி தொகுதியிலிருந்து சயந்தனும் கையெழுத்திட்டுள்ளனர்.
யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலிருந்து ஆர்னல்ட், பரஞ்சோதி, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அரியரத்தினம், பசுபதிபிள்ளை, கல்வியமைச்சர் குருகுலராசா ஆகியோரும், மன்னார் மாவட்டத்திலிருந்து சிறாய்வா, வவுனியா மாவட்டத்திலிருந்து சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கமலேஸ்வரன் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, ரெலோ கட்சியை சேர்ந்த மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த றிஃப்கான், ஜவாகிர், ஜயதிலக ஆகியோரும், சுதந்திர கட்சியிலிருந்து அகிலதாஸ் மற்றும் போனஸ் ஆசனம் மூலம் தெரிவான அஸ்வின் ஆகியோரும் முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை, உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் பதவி மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு அவைத் தலைவர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.