முதலமைச்சருக்கு ஆதரவாக முன்னிலையாக மறுத்த சட்டத்தரணிகள்!

vicknewaran-tnaவடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர், தனது பதவி நீக்கத்திற்கு எதிராகக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வலி.கிழக்குப் பிரதேசசபையின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், முதலமைச்சரினால் நியமிக் கப்பட்ட அதிகாரிகள் மூவரை உள்ளடக்கிய குழுவினர் வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 19 ஆம் திகதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பிரதிவாதிகள் யாரும் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனையடுத்து வழக்கு ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதிவாதிகள் அனைவரையும் மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த 4 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே சட்டமா அதிபர் திணைக்களத்தினர், முதலமைச்சர் சார்பிலான பிரதிவாதிகளுக்காக தாம் மன்றில் முன்னிலையாக மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.

இதனால் அன்றைய தினமும் பிரதிவாதிகள் முன்னிலையாகவில்லை. அத்துடன் வழக்கு அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts