ஐந்து வருடங்களாக அதிகாரங்களை சரிவரச் செயற்படுத்த முடியாத முதலமைச்சர், இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்பதை நம்ப முடியாது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
”பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை இரண்டு மாதங்களில் அடக்கிக் காட்டுவதாக முதலமைச்சர் தெரிவிப்பது ‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ என்பதற்கு சமமாகும்.
இருக்கும் அதிகாரங்களை சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்பதை நம்ப முடியாது.
வடக்கு அமைச்சர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் கூட முதலமைச்சருக்கு உள்ள பொறுப்புகளை அவர் உரிய வகையில் நிறைவேற்றவில்லை
முதலமைச்சரின் செயற்பாட்டின் விளைவாக வடமாகாண சபை கேலிக்கூத்தாக மாறியுள்ளதாக பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வட மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வினைத்திறனற்றதாக மாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.