“வடக்கு மாகாணசபை முதலமைச்சராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் குழுத்தலைவராகவும் க.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் 28 பேருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று, யாழ். ரில்கோ விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், வட மாகாண முதலமைச் சராக க.வி.விக் னேஸ்வரனின் பெயரை திருமதி அனந்தி சசிதரன் முன் மொழிய, ஜி.ரி.லிங்கநாதன் வழி மொழிந்தார். இதனை ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
வடக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் குழுத்தலைவராகவும் க.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதை, கட்சியின் செயலாளர் மாவை. சேனாதிராசா, வடக்கு மாகாணசபை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைப்பார்.
இதன் பின்னரே சபையின் பதவியேற்பு வைபவம் இடம் பெறும் என்று தெரிவிக்கப் பட்டது.