முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார். அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது மக்களின் சார்பில் பொதுப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
வடக்கு மாகாண சபையால் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் முதன்மைச் சுடரை வடக்கு மாகாண முதலமைச்சரே ஏற்றிவைத்தார். ஏனைய சுடர்களையே போரில் உறுவுகளை இழந்த மக்கள் ஏற்றிவைத்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் தாயார் ஒருவரே ஏற்றிவைப்பார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.