#Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2016 ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம் திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் Startup Weekend Jaffna ஆக நடாத்தப்பட்டது. இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது இதுவே முதற்தடவை. அதன் பின் இலங்கையின் 2 வது Startup Weekend கொழும்பில் கடந்த 2016 ஒக்டோபர் 7ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 9ம் திகதி இரவு 9 மணிவரை கொழும்பு மருதானையில் அமைந்துள்ள Trace City இல் Startup Weekend Colombo ஆக நடாத்தப்பட்டது.
இதன் பின் இலங்கையில் 3வதும் வடக்கு மாகாணத்தில் 2வதும் வன்னிப்பகுதியில் முதலாவதுமான தொழில்நுட்ப ரீதியிலான ஒரு நிகழ்வாக Startup Weekend Vanni நிகழ்வானது கிளிநொச்சியின் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பல்லைக்கழகப்பதிப்பாக நடாத்தப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே 3 இடங்களில் நடைபெற்று கிட்டத்தட்ட 30 தொழில்முயற்சிகள் பல்வேறு குழுக்களினால் இனங்காணப்பட்டுள்ளது. இவற்றை அடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை தற்போது உள்ளது. இந்நிகழ்வுகளில் நுாற்றுக்கணக்கிலான தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Startup என்றால் என்ன
மேற்படி நிகழ்வுகள் குறித்த பின்னணி அதன் வெற்றிகள் பற்றி அலசுவதற்கு முன்பாக இந்த பத்தியை வாசிப்பவர் Startup என்றால் என்ன என்று தெளிவு கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
இன்று அரசவேலைவாய்ப்பு என்பது அருகி வருகின்றது. பெரும்பாலான சேவைகள் தனியாரிடம் இருந்து தான் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. நாம் இன்னும் பழைய மரபுகளை பேணுவதால் எமது பிராந்தியத்தின் பல தொழில் முயற்சிகள் உலகத்தரத்திற்கு மாற்றமடையாமல் இருக்கின்றன. அதனால் வளச்சுரண்டல்கள் அதிகரிக்கின்றது. இந்நிலையில் நாம் பிராந்தியத்தின் நலன் கருதியும் எமது எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்காகவும் வேலைவாய்பின்மையினை குறைப்பதற்காகவும் தொழில்முயற்சிகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.
#Startup என்றால் புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல் என்று பொருள்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள்(#Entrepreneur ) இணைந்து தம்மையும் தம் சார்ந்த பிரதேசத்தினதும் வளங்களை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முயற்சியினை எந்தத்துறைசார்ந்ததாயினும் ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு நாம் சில விடயங்களில் தெளிவாக இருக்கவேண்டும்.எந்த துறை என்றாலும் கேள்விகள் ஒரே மாதிரியானவையே
எந்த வகையான தேவை ஒன்றுக்கு நாம் வணிகரீதியிலான தீர்வினை வழங்கப்போகின்றோம்? அந்த தீர்வினால் இலாப மீட்ட முடியுமா? அது அவசியமானதா? ஆபத்தான பக்கவிளைவுகள் அற்றதா? அதற்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எப்படி உள்ளது? அவ்வாறான முயற்சிகள் எதுவும் முன்னர் செய்யப்பட்டுள்ளதா? அல்லது அவ்வாறான தீர்வு வேறு தொழில் முயற்சிகளால் வழங்கப்படுகின்றதா? அது எமது நாட்டுக்கு பொருத்தமானதா? ஏற்கனவே உள்ளதாயின் அதில் உள்ள குறைபாடுகள் என்ன ? அதை எந்தவகையில் நிவர்த்தி செய்ய போகின்றோம்? எம்மிடம் குறித்த தீர்வினை வழங்குவதற்கான வளங்கள் உள்ளதா? அதற்கான குழுவான திறனுள்ள மனித வலு உள்ளதா என பல விடயங்களுக்கு விடை காண வேண்டிய தேவை இருக்கும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான Startup களின் வடிவங்களே. திட்டங்கள் எல்லோரிடம் இருக்கும் அதனை செயற்படுத்துவது சிலரே. தனித்து ஒருவரால் செய்ற்படுத்த முடியாதவற்றை குழுவாக செயற்படுத்துவது இலகுவானதாக இருக்கும். அதற்குரிய சாரியான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பங்குப்பகிர்வுகள் ஆவணரீதியாக செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் சிக்கல் இருக்கப்போவதில்லை.
வங்கி ஒன்றிடம் சென்று எமது முயற்சி ஒன்றுக்கு கடன் கோரும்போது நாம் அனைத்து ஆவணங்களையும் தயாரித்து வழங்கி நிற்போம் அதில் மேற்குறித்த கேள்விகளுக்குரிய பதில்கள் எம்மால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் அப்படியிருந்தும் கூட அந்த கடன்வசதி வழங்கப்படுவது சாத்தியமற்றதாகவே இருப்பதுண்டு.
இந்த நிலையில் தான் உலகாளாவியரீதியில் நடைபெறும் அவ்வாறான Startup நிகழ்வுகள் எமக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன. இங்கே ஒன்று கூடுபவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் ஏற்கனவே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களாவும்.புதிய தொழல்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு சரியான வேறு குழுபங்களார்களை தேடுபவர்களாகவும் இருப்பர். திறமைக்கும் புத்தாக்கத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் இருப்பர்
Startup Weekend நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக இருக்கலாம் ஒரு மருத்துவராக இருக்கலாம் ஒரு கணினிப்பொறியிலாளராக இருக்கலாம், ஒரு இலத்திரனியல் பொறியிலாளராக, ஒரு முதலீட்டாளராக இருக்கலாம். ஒரு சிறந்த வரைகலை வடிவமைப்பாளராக இருக்கலாம் ,ஒரு சிறந்த காணொளிகளை தயாரிக்கும் வல்லுனராக இருக்கலாம் ஒரு வன்பொருள் விநியோகத்தராக இருக்கலாம் ஒரு சிறந்த முகாமையாளராக இருக்கலாம் ஒரு சிறந்த கணக்காளராக இருக்கலாம் . ஒர சி்றந்த செய்நிரல் எழுதுபவராக (Programmer) இருக்கலாம், ஒரு சிறந்த கட்டிட கலைஞராக இருக்கலாம், சிறந்த தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கலாம்,ஒரு சிறந்த சந்தைப்படுத்துனராக கூட இருக்கலாம்.
அவர்களில் இருந்து உங்கள் தொழில் முயற்சிக்குரிய வளங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன் உங்கள் குழுவுக்கான வல்லுனர் உதவியும் கிடைக்கின்றது. வெற்றிபெற்றவர்களுடனான உறவை வலுப்படுத்த முடிகின்றது.
Startup Weekend என்பது
Startup Weekend என்பது Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு
செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வாகும் .Techstar அமைப்பானது Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகளிகளும் கூட
இலங்கையில் Start
up Weekend முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதனை நடாத்துவதற்கு முனைந்த ஏற்பாட்டாளர்களில் பெரும்பாலானவர்
கள் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது முயற்சியால் இது சாத்தியமானது. இந்த நிகழ்வின் முன்னணி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சரண்யன் சர்மா முன்பே வெளிநாட்டில் அவ்வாறானதொரு நிகழ்வில் பங்கெடுத்திருந்தமையால் இதனை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என்று அவா கொண்டிருந்தார்
இந்நிலையில் அண்மையில் உதயமாகிய வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை சம்மேளனத்தின்(NCIT) இயக்குனர் சபையின் முதலாவது கூட்டத்தில் இயக்குனர் சபையில் ஒருவரும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த சுயதொழில் முயற்சியாளருமான ”சரண்யன்” அவர்களால் இந்த நிகழ்வை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக எடுத்த முயற்சி உத்வேகம் பெற்றது.
அதன்பின் NCIT அமைப்பின் இயக்குனர் சபையில் இருந்து தவரூபன் , பிரசாந்தன் ஆகியோர் ஏற்பாட்டுக்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டனர்.
அந்த அமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் ஒரு சர்வதேச நிகழ்வினை நடாத்தவேண்டும் என்ற கருத்து பிரஸ்தாபிக்கப்பட்டவேளையில் அதை சரண்யனின் மேற்படி முயற்சியினை வெற்றிகரமாக்குவதன் மூலம் நடாத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் ICTA அமைப்பினால் இந்நிகழ்வு நடாத்தப்பட முயற்சி எடுக்கப்பட்டிருந்த வேளையிலும் அது வெற்றியளித்திருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது NCIT அமைப்பினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வுகளுக்கு ICTA , FITIS ,Slasscom போன்ற தேசிய அமைப்புக்களும் இணைந்து பங்களிப்புக்களை வழங்கிவருகின்றன. NCIT அமைப்பின் முக்கிய பணிகளில் ஒன்றாக பிராந்தியத்தில் புத்தாக்க தொழில்முனைவுகளை வளர்த்தெடுத்தல் என்ற விடயம் இருப்பதால் இது சாத்தியமாகியது.
Startup Weekend Jaffna
இலங்கைக்கான முதலாவது சர்வதேச Startup நிகழ்வு என்ற நிலையில் இதனை ஏன் யாழ்ப்பாணத்தில் நடாத்தவேண்டும் என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு இடையில் போரினால் பாதிக்கப்பட்டிருந்து மீண்டெழும் நகரங்களில் ஒன்றானதும் இலங்கையின் முன்னணி நகரங்களில் ஒன்றானதுமான யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்வை நடாத்துவது அந்த பிராந்தியத்தில் Startup கலாச்சாரத்தினை வளர்த்து புதிய தொழில்முயற்சிகளைஆரம்பிப்பதற்கும் வழிவகுக்கும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதனால் அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. எதிர்காலத்தில் இந்த நிகழ்வு இலங்கை முழுவதும் முக்கிய நகரங்களில் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
நிகழ்வுக்கு முன்னோடியாக யாழ் உயர்தொழில் நுட்பக்கல்லுாரி , வவுனியா உயர்தொழில் நுட்பக்கல்லுாரி , யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றன.
ரில்கோ விடுதியில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 100 பேர்வரையில் கலந்துகொண்டனர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றது .Techstar சார்பாக அதன் ஆசிய பிராந்திய பிரதிநிதி ”அனுராக் மல்லூ” கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அனுசரணையாளர்களாக NCIT உடன் ICTA,Slasscom,FITIS, ISOC LK மற்றும் CrowdIsland , Cargills Bank , Extream SEO ,Readme நிறுவனங்கள் விளங்கின. வளவாளர்களாக பின்வரும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சலிண்ட அபயக்கோன் ( Crowdisland )
அமித கமகே (Quantum Leap Pvt Ltd )
சர்வேஸ்வரன் கெங்காதரஐயர் (Yarl IT Hub)
சகீவன் சச்சிதானந்தன் (Mystore.lk )
தரிண்டு தசநாயக்க (SquareMobile )
ராகுலன் தர்மகுலசிங்கம் (Epitom Trinergy )
பாதி முகமட் ( Pickme.lk )
சாம் டி சில்வா ( CommonEDGE Pvt Ltd )
சஞ்சன பண்டார (Shopping.lk )
மகேல விக்கிரமசிங்க (Startup.lk )
நடுவர்களாக ICTA அமைப்பில் இருந்து நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சச்சிந்திர சமரரத்தின மற்றும் Slasscomm அமைப்பில் இருந்து அதன் தலைவர் மனோசேகரம் அவர்களும் கலந்துகொண்டு தீர்ப்பு வழங்கினர்.
ஏற்பாட்டாளர்களாக NCIT யில் இருந்து சரண்யன் (Founder of Extream SEO) தலைமையில் தவரூபன் (Founder of Speed IT net) , பிரசாந்தன் ( Founder of Inovay) ஆகியோரும் கொழும்பைச்சேர்ந்த சாமர பீரிஸ் (CTO of Yoho Bed) உம் இருந்து நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு பேச்சாளர்களான Takas இன் CEO லகிரு பத்மலால்,ICTA அருணேஸ் பீற்றர் , Cinergix இன் CEO சண்டிக ஜயசுந்தர ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
இதில் போட்டிக்காக MyTeam,AirTurbon ,Touropedia ,PredCult, Smart Changer,Digital Menu Card ,Smart Travel Guide ,War Tourism,Sky City,Seat For Me,I-Augment,Go Monkey ஆகிய முன்மொழிவுகளின் 12 அணிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு Go Monkey,i-Augment,Start My Team ஆகிய 3 அணிகள் முறையே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் வெற்றியின் காரணமாக இதன்பின் ஆகஸ்ட் இல் பிலிப்பைன்ஸ் போகோல் மாகாணத்தில் நடைபெற்ற Techstar அமைப்பின் ஆசிய பசுபிக் ஏற்பாட்டாளர்களுக்கான மாநாட்டில் (Techstars APAC Summit 2016) இலங்கையில் இருந்து NCIT சார்பில் தவரூபன் அவர்கள் Techstar இன் அழைப்பில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Startup Weekend Colombo
இலங்கைக்கான இரண்டாவது Startup Weekend நிகழ்வு மருதானையில் இடம்பெற்றது. இது சுயாதீனமான ஏற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.Techstar சார்பாக அதன் ஆசிய பிராந்திய பிரதிநிதி ”அனுராக் மல்லுா” மற்றும் வளவாளராக Startup Week நிகழ்வின் தலைவர் ”அன்ரூ கைடே” கலந்துகொண்டார். இந்நிகழ்விலும் நுாற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். வளவாளர்களாக பின்வரும் முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அஞ்சன சோமாதிலக (CAKELABS),பானுக கரிச்சந்திரா( SurgeViral ),சலின்ட அபயகோன்( Crowdisland )
டுலித் கேரத் (Kapruka ),எகந்த சிறிசேன (OMAK Technologies ),பயாஸ் குண்டா (ICTA),கிராஸ் தௌபீக்( Creately ),யோய் லெனோரா,கனிஸ்கா வீரமுன்ட (Pay Media ),சச்சிர பெர்னான்டோ (ErbenLab & NicNac),சஜினி ஜெயவர்த்தன, செலினா பீரிஸ் (Selyn), சரண்யன் சர்மா(Extreme-Seo.net), சரினி குணசிங்க (York Street Partners), சேகர டி சில்வா(Emojot),சிரான் சஞ்ஜீவ ,தரிண்டு திசநாயக்க (SquareMobile)
இதில் போட்டிக்காக முன்மொழிவுகளின் 14 அணிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு Pepper Spray,Unidel,Colombo Coding Camp ஆகிய 3 அணிகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
Startup Weekend Vanni
இலங்கையின் 3வது சர்வதேச Startup Weekend நிகழ்வு சம்பந்தமாக யாழ்ப்பாணம் நிகழ்வின் போதே திட்டமிடப்பட்டதன்படி போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டங்களை ஒருங்கிணைத்து கிளிநொச்சியில் நடாத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை யாழ்பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பொறியில் பீடத்தில் நடாத்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வை நடாத்துவது அந்த பிராந்தியத்தில் Startup கலாச்சாரத்தினை வளர்த்து புதிய தொழில்முயற்சிகளைஆரம்பிப்பதற்கும் வழிவகுக்கும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டதும் ஏற்பாடுகள் துரிதகதியில் முடுக்கிவிடப்பட்டன.
நிகழ்வுக்கு முன்னோடியாக ,யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் , யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றன. டிசம்பர் 16 -18 வரை கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் குறிப்பாக கூடுதலாக பல்கலைக்கழக மாணவர்கள் என சகலதுறைகளில் இருந்தும் 120 பேர்வரையில் கலந்துகொண்டனர். Techstar சார்பாக அதன் சென்னையில் இருந்து ”அபிசேக்” வளவாளராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அனுசரணையாளர்களாக NCIT உடன் ICTA,Slasscom மற்றும் 99Technologies, Seylan Bank ,Shoutout,TamilMirror,Readme நிறுவனங்கள் விளங்கின. வளவாளர்களாக பின்வரும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சாமர பீரிஸ் ( Yoho Bed )
சகீவன் சச்சிதானந்தன் ( Mystore.lk)
சண்முகதாசன் பிரசாந்த ( IT Signature )
தர்மகுலசிங்கம் ஜெயந்தன் (SenzMate IoT Solutions)
ஜோய் பெரேரா (Boost Metrics (Pvt) Ltd)
சயந்தன் கனகநாயகம்(Atiral)
பிரசாந்த் சுபேந்திரன்( BusSeat.lk)
முகுந்தன் பத்தமநாதன் (IdeaBeam.com)
நடுவர்களாக ICTA அமைப்பில் இருந்து நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சச்சிந்திர சமரரத்தின மற்றும் Crowdisland அமைப்பின் தலைவர் சலிண்ட அபயகோன் அவர்களும் கலந்துகொண்டு தீர்ப்பு வழங்கினர். ஏற்பாட்டாளர்களாக NCIT யில் இருந்து பிரசாந்தன் ( Founder of Inovay) தலைமையில் தவரூபன் (Founder of Speed IT net) , சரண்யன் (FOunder of Extream SEO) மற்றும் சர்வேஸ்வரன் (Yarl IT Hub), அமித கமகே(Co – Founder at Quantum Leap) ஆகியோரும் இருந்து நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு பேச்சாளர்களாக ICTA இல் இருந்து அகமட் , மற்றும் Yarl IT HUB சயந்தன் பாலதாசன் , பொறியில் பீட பீடாதிபதி அற்புதராஜா ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
இதில் போட்டிக்காக V Charge,Easy Park,Travel with Me,Insector,KinderMed,Safe Crossing,Cheese,How Am I? ,E-Toy,Press Me ஆகிய முன்மொழிவுகளின் 10 அணிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு KinderMed,E-Toy,How Am I? ஆகிய 3 அணிகள் முறையே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.சான்றிதழ் இன்றிய சிறந்த புத்தாக்க திட்டமாக V charge அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 12 ஆணிகள் களத்தில் இருந்தபோதும் 2ம் நாள் 2 அணிகள் நீக்கப்பட்டு மற்றைய அணிகளுடன கலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறுதிநாள் நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணம் கலந்து சிறப்புரையாற்றினார் .முதலாவது இடத்த்ினை பெற்றவர்களுக்கான சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார். 2ம் 3ம் இடங்களுக்கான சான்றிதழ்களை பொறியல் பீடாதிபதி கலாநிதி அற்புதராஜா வழங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கும் நடுவர்களுக்கும் Techstar வளவாளர் அபிசேக்கிற்கும் நினைவுப்பரிசில்கள் ஏற்பாட்டுக்குழுவினரால் வழங்கிவைக்கப்பட்டது.
துணைவேந்தர் தனதுரையில் இந்த நிகழ்வை குறிப்பாக கிளிநொச்சியில் நடாத்தியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதற்காக ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியும் கூறினார்.இது போன்ற நிகழ்வுகள் அனைத்து பீடங்களையும் இணைத்து செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாணவர்களதும் அணிகளினதும் Presentation திறமை குறித்து பாராட்டினார். நடுவர்களும் அணிகளின் திறமை குறித்தும் இறுதி Presentation திறமை குறித்தும் சிலாகி்த்து பேசினா். வெற்றிக்காக தெரிவுசெய்யபட்ட அணிகள் தவிரந்த ஏனைய அணிகளும் வெற்றியாளர்களே என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தமது புத்தாக்கம் குறித்து மேம்பாடுகளை செய்து வெற்றி அடைய வாழ்த்தினார். நிகழ்வு ஏற்பாட்டுக்குழுத்தலைவர் பிரசாந்தனின் நன்றியுரையுடன் 2016ம் ஆண்டின் இலங்கையின் Startup Weekend பயணம் இனிதே நிறைவுற்றது.
எதிர்காலத்தில்…..
புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு தொழில்நுட்ப் உட்புகுத்தி செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? நீங்கள் ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதனை தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்த விரும்புகின்றீர்களா? ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேண்டாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. இவ்வாறான நிகழ்வுகளில் கிடைக்கும் திட்ட முன்மொழிவுகள் உங்கள் பாதையினை வெற்றியாக மாற்றிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.
கலந்து கொள்ள கட்டணம் உண்டு. 3 நாட்கள் குறித்த இடம் ஒன்றில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு.தங்குமிட வசதி சில நிகழ்வுகளில் வழங்கப்படுகின்றது..
Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் என்று அறிந்து வைத்திருப்பது பங்கு கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக .இருக்கும் அந்த வகையில்
1ம் நாள் (5.30pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த பேச்சு மொழியில் கருத்திட்டங்களை 1 நிமிடத்திற்குள் முன்மொழியலாம்.இந்த முன்மொழிவுகளின் பின் சுரக்கமான விபர அட்டை ஒன்றை தயாரித்த அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய 10 – 14 Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் Mentor என்று சொல்லப்படுக்கின்ற வெற்றி வெற்ற தொழில் முயற்சி நிறுவனங்களின் தலைமையாளர்கள் உரிய உதவிகளை வழங்குவார்கள்.
2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர் . வளவாளர்களுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு ஒ்வவொரு குழுவும் தங்களுக்கு தேவையான வளவாளர்களை தாமே நியமித்துக்கொள்வர். Customer Validation இற்காக குழுவினர் வெளியில் அனுப்பப்பட்டு தகவல்கள் சேகரிக்க அறிவுறுத்தப்படுவர். 3ம் நாள் மாலை வரை அது தொடரும்.
3ம் நாள் (9am -9pm)
ஒவ்வொரு குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் நடுவர்கள் மத்தியில் 5நிமிடத்திற்குள் Presentation வழங்குவார்கள்.அதற்கு முன்பாக வளவாளர்களால் இது தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்படும். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இங்கே கிடைக்கும்
எங்கே நுழைவுச்சீட்டினை பெறுவது?
1)https://startupweekend.org/locations/asia/lk (இணையவழி)
2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்
பங்கு பற்றுபவர்களுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள் என்ன என்று பலரும் வினாவுகின்றனர். இவை தான் அந்த சலுகைகள்
Startup ஒன்றினை ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
பல்வேறுதரப்பட்ட துறைசார்ந்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
தொழில்முனைவோருடையான தொடர்புகள்
புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
– பங்குகொள்ளும் அனைவருக்கும் அனுசரணை நிறுவனங்களினால் வழங்கப்படுத் சலுகைகள்
– நிகழ்வின்போது பங்குபெறுபவர்களுக்கு அங்கு பயன்படுத்தFree Wifi வசதியை வழங்கும்
– பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்
– பங்குபற்றுபவர்களுக்கு ஒருவருடத்திற்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்
மேலும் தகவல்களை இங்கு பெறலாம்
1) Startup Weekend Srilanka
2) https://www.facebook.com/StartupWeekendLK
3) http://www.ncit.lk
4) Read Me
படத்தொகுப்புக்கள்
(படங்கள் : Readme, BirdFather)