முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் “எதிர்ப்பு அரசியல்வாதி” என்கின்றார்கள் ! -முதலமைச்சர்

யாழ்.இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (27) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது முழுமையான உரை வருமாறு

அதிபர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்திருக்கக்கூடிய பழைய மாணவர்களே, பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளே, கல்விமான்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!

உங்கள் பழைய மாணவரும் எனது பழைய மாணவருமான இந்நாட்டின் பிரதம நீதியரசர் நண்பர் ஸ்ரீபவன் அவர்கள் இந்த நிகழ்வுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஏமாற்றமடைகின்றேன். இந்நாட்டின் பிரதம நீதியரசர்கள் இருவர் உங்கள் பழைய மாணவர்கள். பிரதம நீதியரசர் சர்வானந்தா அவர்களும் உங்கள் பழைய மாணவரே. அப்பேர்ப்பட்டவர்களை உருவாக்கிய உங்கள் கல்லூரி “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று ஒளவையார் வழி நடந்து கொள்கின்றீர்கள். அதே நேரத்தில் உங்கள் கல்லூரித் தலைமை வாசகம் வள்ளுவன் குறளைக் குறிப்பிட்டுக் கூறுகின்றது –
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்று. அக் குறளுக்கு அமைவாக மாணவர்களை வழிநடத்துகின்றீர்கள். ஆனால் உங்களிடம் இருக்கும் இன்னொரு சிறப்பியல்பை நீங்களே அறிந்திருக்கின்றீர்களோ தெரியாது. அதாவது தமிழும் சைவமும் உங்களின் மனதை, போக்கை, பாதையை வகுத்துச் செல்கின்றன என்றால் மிகையாகாது. “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற புறநானுற்றுக் கருத்துக்கு ஏற்ப, “அன்பே சிவம்” என்ற சைவக் கருத்துக்கு ஏற்ப, பிற மொழியினரையும் மதத்தினரையும் மதித்து அனுசரித்துப் போவது உங்கள் கல்லூரியின் சிறப்பியல்பு என்று காண்கின்றேன்.

உங்கள் 75ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு அப்போதைய பாராளுமன்ற சபாநாயகர் சேர் அல்பர்ட் பீரிஸ் அவர்கள் அழைக்கப்பட்டார். அது சுமார் 1965ம் ஆண்டாக இருக்கக்கூடும். அப்பொழுதெல்லாம் சிங்கள மாணவர்கள் இங்கு கல்வி கற்று வந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பொழுது ஒரு பௌத்த பிக்கு உங்கள் மாணவர்களுக்கு சிங்களம் கற்றுக் கொடுத்தார் என்பதும் நினைவிருக்கலாம்.

இவ்வாறு எமது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்கும் சமயப் பாரம்பரியத்திற்கும் ஏற்றாற்போல் வளர்ச்சி அடைந்து வந்ததுதான் உங்கள் கல்லூரி. “இந்து” என்ற சொல்லுக்கு இலச்சினையாக அமைந்துள்ள கல்லூரியே உங்கள் கல்லூரி.

யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று இன்று இறுதி நாள் மாலைநேர நிகழ்வில் என்னைக் கலந்து கொள்ளுமாறு உங்கள் பாடசாலையின் அதிபர் அழைத்திருந்தார். இங்கும் ஒரு சிறப்பியல்பைக் காண்கின்றேன். முதல்நாள் பிரதம அதிதி கல்வி அமைச்சர் அவர்கள். நாட்டின் மத்திய அரசாங்க அமைச்சர் அவர். கடைசிநாள் இன்று மாகாண முதலமைச்சர் நான். இடைப்பட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் பிரதம அதிதிகளாக உங்கள் பழைய மாணவர்களையே அழைத்திருந்தீர்கள். உங்கள் பழைய மாணவர்களை நீங்கள் மிகவும் மரியாதையாய் மதிப்புக் கொடுத்து நடத்துவதாக அறிகின்றேன். அவர்கள் நான்கு மாதங்கள் இருந்திருந்தாலும், நான்கு வருடங்கள் இருந்திருந்தாலும் சிறு பிராயத்தில் இக் கல்லூரியை நாடிவந்த நாள் முதல் இருந்திருந்தாலும் அதே மதிப்பை அளிக்கின்றீர்கள் என்று கேள்விப்பட்டேன்.

மாணவப் பருவம் என்பது ஏனைய மாணாக்கர்களோடு இணைந்து கொண்டு குருமார் எனப்படும் ஆசிரியர்களிடம் பலதையுங் கற்றுக் கொள்கின்ற ஒரு பருவம். பள்ளிப் பருவம் என்பது மிகச் சிறப்பான காலம். மாணவர்கள் எதுவித கவலையுமின்றி நிறைய விடயங்களைக் கற்றுத் தேர்ச்சி பெறக் கூடிய ஒரு காலம்.

கல்வி கற்க வேண்டிய காலத்தில் கற்க வேண்டியவற்றை குறைவின்றிக் கற்கின்ற திறமையை நாம் எம்மிடையே வளர்த்துக் கொள்ளல் மிக அவசியமானதாகும் இதை இங்கு கூறுவது “கொல்லன் தெருவில் ஊசி விற்கச் சென்ற” கதையாகிவிடும் என்பதை நான் அறிவேன். ஏனெனில் இந்துவின் மைந்தர்கள் ஏனைய சராசரி மாணவர்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது வேறுபட்டவர்கள் என்று என் நண்பர்கள் கூறக் கேட்டுள்ளேன். அவர்களுக்கென்று தனியானதொரு பாணி உண்டு என்பார்கள். வளர்கின்ற பருவத்திலேயே இக்கல்லூரி மாணவர்களை இக் கல்லூரியின் ஆசிரியர்கள் இலகுவாக இனங்கண்டு விடுகின்றார்கள். கணித பாடத்தை சிறப்பாகக் கற்கின்றவர்களை பொறியியல் துறையிலும் விஞ்ஞான பாடத்தை சிறப்புறச் செய்பவர்களாயின் அவர்களை மருத்துவத் துறையிலும் கணினி, தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், புவியியல் என்றால் அந்தந்தத் துறையில் முன்னேற்றமடையும் வகையில் வழிகாட்டுவதோடு மட்டும் நின்றுவிடாது அவ்வந்தத் துறைகளில் அதிஉச்ச நிலைக்கு அவர்களை உயர்த்திவிடுவது இக் கல்லூரியின் ஒரு சிறப்பம்சமாகும்.

இன்று வடபுலத்தின் கல்வியாளர்களை நாம் ஒப்பீடு செய்வோமாயின் முன்னிலை வகிப்பவர்கள் இந்துவின் மைந்தர்களாகவே காணப்படுகின்றார்கள். இது அவர்களுக்கே உரிய ஒரு தனிச்சிறப்பு.அதே நேரம் அவர்களுடைய பள்ளிப்பருவ குறும்புகளையும் இங்கே நினைவுகூரத்தான் வேண்டும். நான் அண்மையில் கேட்டதைக் கூறுகின்றேன். உங்களுடைய அதிபரின் மாணவப் பருவத்தில் அவருடைய வகுப்பில் கற்ற மாணவர்கள் அனைவரும் இணைந்து கொண்டு அப்போதைய பிரதி அதிபரின் மோட்டார் வாகனத்தை எடுத்துச் சென்று பாடசாலையின் பின்புறத்தில் ஒளித்து வைத்து விட்டார்களாம். பிரதி அதிபர் பாடசாலை முடிந்து காரைத் தேடினால் காரைக் காணவில்லை. நிறுத்திய இடத்தில் இருந்து காரை எடுத்துச் சென்ற ரயர் அடையாளங்களும் காணப்படவில்லை. அவர்களுக்கோ ஆச்சரியம். எங்கு தேடியும் கார் கிடைக்கவில்லை. எதேச்சையாக பாடசாலையின் ஒதுக்குப் புறத்திற்கு சென்ற ஒருவர் அங்கே பிரதி அதிபரின் கார் நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார் எவ்வாறு காரை அந்த ஒதுக்குப்புறத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று. எஞ்சினை இயக்கியோ அல்லது தள்ளிக் கொண்டோ வரமுடியாத அந்த ஒதுக்குப் புறத்திற்கு எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்று பின்னர் தான் தெரிய வந்தது. அதாவது தூக்கிக் கொண்டு வந்து ஒளித்துவிட்டார்கள் என்று. காரணம் பிரதி அதிபர் ஒரு குறிப்பிட்ட வகுப்பறை மாணவர்களுக்குத் தண்டனையைச் சற்று அதிகமாக வழங்கிவிட்டாராம். இதை நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் இந்த மாணவர்கள் படிப்பிலும் சூரர், குறும்புத் தனத்திலும் குறைந்தவர்களல்ல என்பதை எடுத்துக்காட்டவே.

இன்றைய மாணவர்களே எதிர் காலத்தின் தலைவர்களாக மாறுகின்றார்கள் அல்லது மாற்றப்படுகின்றார்கள். தமிழினத்தைப் பொறுத்தவரையில் எமது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். எங்களுடைய மக்கள் நிறையத் தேவைகளை உடையவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். உண்ண உணவில்லை, இருக்க இடமில்லை, தொழில் வாய்ப்பு இல்லை, அவர்கள் காணிகள் வெளியார் சுவீகரிப்பில் அகப்பட்டுள்ளன, பிள்ளைகள் சிறையில் வாடுகின்றார்கள் அல்லது காணமற் போயுள்ளார்கள் என இன்னோரன்ன பிரச்சனைகள் பல அவர்கள் முன் தலைதூக்கி நிற்கின்றன. ஒரு காலத்திலே மிகச் சிறப்புடன் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்கள் இன்று ஏதிலிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தமது குடும்பத் தலைவர்களை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.

பிள்ளைகளை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்த சிறார்கள் என பலதரப்பட்ட மக்கள் தினமும் எம்மிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களின் சோகக் கதைகள் எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன. இவர்களுக்கு உதவுவதற்கு நாமும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் அரசாங்கம் தரும் பணம் மிகச் சொற்பமே. அவற்றைக் கூடுமானவரை இலஞ்ச ஊழல்கள் இன்றி மக்களிடம் போய்ச் சேர்ப்பிக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் பழைய பழக்கங்கள் எங்கள் அலுவலர்கள் சிலரை விட்டுப் போவதாக இல்லை. வறியவர்களிடம் வலிந்தெடுக்கும் வக்கிர புத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்திருக்கும் உங்களில் பலரும் எம் மக்களுக்கு உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதை நான் அறிவேன். எனினும் இவ்விடயங்களை ஒழுங்குபடுத்தி வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நிதிகளை உண்மையில் தேவையுள்ள எமது மக்களுக்கு முழுமையாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டபோது முந்திய அரசாங்கத்தினால் பல தடைகள் விதிக்கப்பட்டன. இப்போது சற்று இணக்கமான சூழல் தென்படுகின்றது. ஆனாலும் முழுமையான அங்கீகாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்பட்டு விடுமேயாயின் உங்கள் அனைவரிடமும் எமது தேவைகள் குறித்து விண்ணப்பிக்க எம்மால் முடியும். நீங்களும் தாராள மனதுடன் உதவி புரியலாம். அண்மையில் இங்கிலாந்தில் தமிழ் சகோதர சகோதரிமார் என்னிடம் வெளிநாட்டுப் பணத்தை நீட்டினார்கள். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பணமானது சட்டப்படி வரவேண்டும் என்பது எனது விருப்பம். ஆகவே உங்கள் பணங்களை இலங்கையில் எவருனுக்கேனும் அனுப்புங்கள். அவர்களை இலங்கைப் பணம் மூலம் எமக்கு அனுப்பச் சொல்லுங்கள். நாங்கள் ஏற்று நீங்கள் விருப்பப்படும் செயற்பாடுகளை செவ்வனே செய்வோம் என்று கூறினேன். சிலர் அவ்வாறு செய்யத் தொடங்கி விட்டார்கள்.

இதை நான் இங்கு குறிப்பிடுவது உங்களிடமிருந்து நிதி உதவியை பெறுவதற்கான ஒரு முத்தாய்ப்புச் செய்தி என்று யாரும் தப்பாக எண்ணிவிடாதீர்கள். ஆனால் இந்த நொந்து போன சமூகத்தை ஏனைய பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஒப்பாக உயர்த்துவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புக்களும் வழிகாட்டல்களும் மிகமிக அவசியமானது. ஆகவே எப்பவாவது ஒரு நாள் உங்கள் அனைவரதும் உதவியை நாடும் நாள் வரும். அதனை முன்கூட்டியே உங்களுக்குக் கூறிவைக்கின்றேன்!

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இன்று வடமாகாணத்தை ஆள்வதற்கென ஒரு தனியான அலகாக வடமாகாணசபை உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் மாநகரசபையையும் நிர்வகிப்பதற்கு அவற்றிற்கென தனியான ஒவ்வொரு சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் நிர்வகிக்கக்கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் மிக விரைவில் நடைபெற இருக்கின்றன. தற்போது அவை வழக்கொழிந்து நிற்கின்றன. இத் தேர்தல்களில் எமது பாரம்பரிய “நாட்டாண்மை முறை” தெரிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேச சபை, நகர சபை அல்லது மாநகர சபை நிர்வாக முறைமையைக் கற்றுத் தேர்ந்தவர்களும் அல்லது கற்றுத் தேற முடிந்தவர்களும் மற்றும் நேர்மையாகச் செயற்படக் கூடியவர்களும், விலை போகாதவர்களும், ஊழல் இலஞ்சத்திற்கு இடமளியாதவர்களும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்கள் நலம் சார்ந்த, படித்த, தன்னலமற்ற சேவையை மக்களுக்குக் கொடுக்கக்கூடிய பிரதிநிதிகளையே நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கள் கட்சி என்பதால் அவர் எப்படிப்பட்டவர் என்றாலும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படப்படாது. இன்று பிரதேசசபை நிர்வாகம்கூட மிகவும் சிக்கலானதொன்றாக மாறி வருகின்றது. கணினி ஞானம், கணக்கு ஞானம், சபையில் நடந்து கொள்ளும் விதம் பற்றிய ஞானம் போன்றவை பிரதேசசபைப் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும்.
ஆகவே பிரதேசசபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

படியாத சிலர் அண்மைக் காலங்களில் “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாங்கள் எதையுஞ் செய்யலாம்” என்று படித்த, பண்புள்ள செயலாளர்களுக்குக் கூறி, அச்செயலாளர்கள் அப்பேர்ப்பட்டவரின் கோரிக்கைகளை மறுத்ததால் குறித்த நபர்கள் அடிதடியில் இறங்கவும் பின்னிற்கவில்லை. சட்டத்தில் இடமிருக்கின்றதா என்று பார்க்க அவர்களுக்கு அறிவு குறைவு. எனவே “நான் சொன்னால் அவர் செய்ய வேண்டும்” என்று ஆணவத்துடன் கூறத் தலைப்பட்டு விட்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் சில ஊழியர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களை உள்ளெடுக்க தற்போதிருக்கும் சட்டத்தில் இடமில்லை. இதைக் கூறினால் அவர்களின் பதில் “சேர்! நீங்கள் எடுங்கள் என்று சொன்னால் அவர்கள் எடுக்கத்தான் வேண்டும்! நீங்கள் ஆணையிடுங்கள்” என்று கூறினார்கள்.

இதுதான் வடமாகாணசபை வரமுன் இருந்த சூழல். அதனை எங்களிடமும் எதிர் பார்க்கின்றார்கள் மக்கள். சட்ட திட்டங்கள், சுற்றறிக்கைகள், காரியாலயப் பழக்க வழக்கங்கள் எதையுமே ஏற்காமல் தான்தோன்றித்தனமாக நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால் எமது வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கூட இதே போலத்தான் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். சட்டத்திற்கு அமைவாக நடக்க வேண்டும் என்றால் முன்னர் எவ்வாறு செய்தார்கள் என்று கேள்வி கேட்கின்றார்கள். ஆகவே கல்வியறிவின் முக்கியத்துவத்தை இதிலிருந்து உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் கல்விகற்ற இக் கல்லூரித் தாயின் 125வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு இன்று பல்வேறு நாடுகளிலும் இருந்து எவ்வாறு பெருந் தொகைப் பணத்தை செலவளித்து இங்கே வந்திருக்கின்றீர்களோ அதேபோல் எதிர்வரும் தேர்தல்க் காலத்திலும் இங்கே வந்து உங்கள் உங்கள் பகுதிக்குரிய பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளில் முன்னின்று உழைக்க வேண்டும். படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் ஊழல் அற்றவர்களையும் தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும். அதுமட்டுமல்லாது நீங்கள் சார்ந்த கட்சிகளில் மிகச் சிறப்பானவர்களைப் போட்டியிட வைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.

எமது தற்போதைய “நாட்டாண்மை” ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் எமது மக்களுக்கு ஒரு பூரண விடிவு கிடைக்கும். வன்முறை மூலம் நிர்வாகம் நடந்த காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும். தற்போது நடந்து முடிந்த தேர்தலின் போது கோடி கோடியாகப் பணம் செலவழிக்கப்பட்டது. பணத்தைச் செலவழித்தவர்கள் எவ்வாறு தாம் செலவழித்ததை இனி ஈடு செய்ய முடியும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றார்கள். சிலர் பணம் தந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு விஸ்வாசமாய் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். பணம் செலவழித்து வாக்குகளை வாங்கும் அண்மைக்கால பழக்கங்களை நாங்கள் இனியாவது கைவிட வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு சிறு பகுதியை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன் –
“நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற பழக்க வழக்கங்கள், இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கால முறைக்கு ஏற்றாற்போல் நம்மை நாமே அறிவுபூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். நாம் எமது முகவரியை இழக்காமல் எமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறினார் – “நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கின்றோம். பணி செய்து கொண்டிருக்கின்றோம். இவைகளைச் செய்யும் போது நமது வாழ்வில் ஒரு இலட்சியம் உருவாகும். அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும்பெரும் இலட்சியங்கள் தோன்றும். இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணங்கள் தோன்றும். எண்ணங்கள் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்” எனத் தொடர்ந்து கூறிக் கொண்டு சென்றார்.

மேலே குறிப்பிடப்பட்ட வரிகள் அனைத்தும் எமக்கெனக் குறிப்பிடப்பட்ட வரிகள் போலத் தோன்றுகின்றன. இப்போது எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும், விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும். அவ்வாறான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமாகவே எமது பணிகளை விரைவு படுத்தி எம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை ஓர் உயர் நிலைக்கு கொண்டு வர முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.

என்னைப் பலரும் ஒரு “எதிர்ப்பு அரசியல் வாதி” என வர்ணிப்பதை நான் அறிவேன். நான் ஒரு அரசியல்வாதியும் இல்லை. கட்சி சார்ந்தவனும் இல்லை. நீதித்துறையில் எனது காலத்தைக் கழித்த பின்னர் சிவனே என்று ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும் மூழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்கள். தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். மக்களும் தங்கள் வாக்குகளைப் பெருவாரியாக எனக்கு அளித்து அமோக வெற்றியடையச் செய்தார்கள். அதனால் என் நிலை மாறியது.

நான் கொழும்பிலே பிறந்து, கொழும்பிலே கல்வி கற்று, அங்கேயே சீவித்தவன். சுமார் 10 வருடங்கள் வடகிழக்கு மாகாணங்களில் நீதித்துறையில் இருந்து கடமையாற்றியவன். ஆனால் சிறுவயது முதல் எனக்கு தமிழ் மீது பற்று, தமிழர்கள் மீதும் பற்று; அத்துடன் வடமாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் எனப் பிரித்து நோக்காது அனைத்து தமிழர்களும் இந்த இலங்கைத் திருநாட்டில் சிங்கள மக்களுடன் சம அந்தஸ்துடைய இனமாக வாழ வேண்டுமென்பதில் குறியாக இருந்தவன்.

எனினும் இங்கு வந்த பின்னர் தினமும் என்னைச் சந்திக்க வருகின்ற மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி, அவர்களுடைய கஸ்டங்கள் பற்றி, அவர்களுடைய தேவைகள் பற்றி, அவர்கள் பறிகொடுத்த வசதிகள் பற்றி, அவர்கள் வாழ்வில் இழந்தவை பற்றித் தமது சோகக் கதைகளை எனக்கு எடுத்துக் கூறக் கூற என்னுள் ஒரு வைராக்கியம் பிறந்தது. இந்த மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் எந்த மட்டத்திலாவது சென்று பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. அதற்காக நான் எவ்வாறான எதிர்ப்பை அல்லது பழிச்சொல்லை ஏற்க நேர்ந்தாலும். நான் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. சில கட்சிகளில் ஒருவர், இருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களின் முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் “எதிர்ப்பு அரசியல்வாதி” என்கின்றார்கள்.

ஆகையால்த்தான் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நீங்களும் இதுபற்றி நன்றாகச் சிந்தியுங்கள். எது நல்லது என நம்புகின்றீர்களோ அதனை வலுப்பெறச் செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்! அவ்வாறான செயல்களுக்கான அத்திவாரங்கள் இப்போதிருந்தே இடப்பட்டு திட்டமிட்ட முறையில் மிகச் சிறப்பான சபைகளை எதிர்வரும் தேர்தல்களில் உருவாக்குவோம். அத்துடன் எங்கள் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடு படுவோம் என தெரிவித்து இக்கல்லூரி நிகழ்வில் அதன் 125வது வருட முடிவு விழாவில் சில அரசியல் விடயங்களை சேர்த்துக் கொண்டமைக்கு கல்லூரிச் சமூகத்திடம் எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு இக்கல்லூரி இன்னும் பல நூற்றாண்டுகள் தனது ஒப்பீடில்லா கல்விச் சேவையை எமது மாணவச் செல்வங்களுக்கு நல்க வேண்டுமென வாழ்த்தி, வழுத்தி விடைபெறுகின்றேன்.என்று தெரிவித்தார்

இணைப்பாளராக ஊடகவியலாளர்  சிறீரங்கா நியமிக்கப்பட்டதன் பின்னணியில் அவரை முதன்மைப்படுத்துவதாக எழுந்த சர்ச்சைகளின் விளைவாக கல்லுாரியின் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம் இறுதி விழா நிகழ்வுகளை புறக்கணித்திருந்ததும் அது தொடர்பில் பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டிருந்ததும் அறிந்ததே.

குறுகிய காலம் கற்றிருந்தும் ரங்காவுக்கு முன்னுரிமை கொடுத்தது , பிரதம நீதியரசர் சிறீபவன் விழாவுக்கு அழைக்கப்படாமை தன்னை இறுதி நாள் விழாவுக்கு அழைத்தமை ,1965 இல் மத்திய சபாநாயகர் அழைக்கப்பட்ட வேளை இங்கு பௌத்த துறவி கற்பித்தது சிங்கள மாணவர் கல்வி கற்றது  தொடர்பில் அவர் தனது உரையில் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது.

இன்றைய நிகழ்வில் எந்த வகையிலும் ரங்கா அவர்களை மேடையில் முன்னிலைப்படுத்தக்கூடாது என்று அதிபரை அழைத்து முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தது.கடந்த 3 நாள் விழாக்களிலும் முதன்மைப்படுத்தப்பட்ட நிலையில்  முதலமைச்சர் உரை நிகழ்த்தி விழாவில் இருந்து சென்றதும் மேடைக்கழைக்கப்பட்டு பரிசில்கள் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Posts