முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு கோரிக்கை

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை அரசாங்கம் வரையறுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும்.

பாடசாலைகளிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் துறையை தேர்வு செய்கின்றனர். இதனால் தச்சு வேலை, மின்பொறியியல், சாரதி, நடத்துனர் உள்ளிட்ட ஏனைய பல தொழில்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

முச்சக்கர வண்டிகளை அதிகளவில் இறக்குமதி செய்வதனால் இளைஞர்களின் தொழில் வளம் பாதிக்கப்படுகின்றது. தனியார் பஸ் போக்குவரத்துத் துறைக்கும் நெருக்கடியான நிலைமை ஏற்படுகின்றது.

இந்தியாவில் டெல்லியில் முச்சக்கர வண்டிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையிலும் முச்சக்கர வண்டிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அரசாங்கம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, வீதிகளை மறித்து போராட்டங்கள் நடத்தப்படுவதனால் பாரியளவில் பஸ் போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்படுவதாகவும், எரிபொருள் விரயம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதியின் ஓரங்களில் போராட்டங்களை நடாத்துமாறு அவர் கோரியுள்ளார்.

Related Posts