செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகளை போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம ஜுலை 31ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.
சகல முச்சக்கர வண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்படல், கட்டண விபரத்தை வண்டியின் வெளிப்புறத்தில் காட்சிப்படுத்தல், வலது புறத்தில் கதவு பொருத்தப்படல் ஆகியவற்றை இந்த ஒழுங்குவிதிகள் கட்டாயப்படுத்துவதுடன் முச்சக்கர வண்டியின் வேகம் ஒருபோதும் மணிக்கு 40 கிலோமீற்றருக்கு மேல் போகக்கூடாது எனவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பயணிகளுக்கு மேல் முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியாது எனவும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு வளர்ந்தவருக்கு பதிலாக 12 வயதிற்கு குறைந்த இரண்டு பேரை ஏற்றிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் இருக்கையின் பின்புறத்தில் சாரதியின் புகைப்படம், சாரதியின் அனுமதி பத்திரத்தின் பிரதி, தேசிய அடையாள அட்டையின் இலக்கம், அவசர தொடர்புக்கான தொலைபேசி இலக்கம் எனும் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும் எனவும் ஒழுங்குவிதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கு விதிகளின் மூலம் முச்சக்கர வண்டி விபத்துக்களை பெருமளவில் குறைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.