முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி இறுதி கால எல்லையாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயமாக்கி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கடந்த 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, முச்சக்கர வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்த தூரம், வாகனத்தின் இலக்கம், கட்டணம், பெற்றுக் கொண்ட திகதி என்பன அப்பற்றுச் சீட்டில் அமையப் பெறல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணிகள் அமரும் வலது பக்கம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மறைத்திருத்தல் வேண்டும் என்ற அறிவிப்பும் குறித்த வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.
மேற்படி சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.