முக்கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Achchuvely-crimeஅச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொலைக்கு பயன்படுத்திய வாளை, பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

அச்சுவேலி, கதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நிக்குநானந்தன் அருள்நாயகி (வயது 50), யாசோதரன் மதுசா (வயது 27), நிக்குநானந்தன் சுபாங்கன் (வயது 19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்செயன் தர்மிகா (வயது 25) மற்றும் க.யசோதரன் (வயது 30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து இக்கொலைகளுடன் தொடர்புடையவரென, படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன், ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை, இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியினையும் பொலிஸார் கைப்பற்றியதுடன், முச்சக்கரவண்டி உரிமையாளரினையும் அச்சுவேலி பொலிஸார் கைது செய்திருந்ததுடன், கொலைக்கும் அவருக்கும் தொடர்பில்லையென்பதினை விசாரணைகளில் அறிந்த பொலிஸார் அவரை பொலிஸ் பிணையில் விடுவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரதான சந்தேகநபர் கடந்த 5ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதவான் இன்று (16) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியானவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts