தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்புபானது பாமன்கடையிலுள்ள மனோ கணேசனின் வீட்டில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது 13ம் திருத்தம், வட மாகாணசபை தேர்தல் ஆகியவை தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டன. அதேபோல் சிங்கள முற்போக்கு மற்றும் ஜனநாயக கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுசெயலாளர் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சுமந்திரன் எம்பி, கே. சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் தலைவர் மனோ கணேசன், உதவி பொதுசெயலாளர் சண். குகவரதன், ஊடக செயலாளர் பாஸ்கரா சின்னத்தம்பி, நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.