முகாம்களுக்கு நா.மன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் : ‘இவர்கள் முகாம் பிள்ளைகள்’ என்ற அடைமொழி வேண்டாம்

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களை, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து பார்வையிடவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது. இதன்போது மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது, ‘இவர்கள் முகாம் பிள்ளைகள்’ என்று பாடசாலையில் கூறும் அடையாளம் வேண்டாம். அந்த அடைமொழி இல்லாமல் எங்கள் பிள்ளைகள் வாழ்வதற்கு, எங்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலிகாமம் வடக்கிலிருந்து மீளக்குடியேறி நலன்புரி முகாமில் வசிக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பத் தலைவியொருவர் தெரிவித்தார்.

‘எங்களது பிள்ளைகள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றாலோ அல்லது ஏதேனும் சிறப்பான சாதனைகள் செய்தாலோ, யார் இந்தப்பிள்ளை என்று யாரேனும் கேட்டால், அவர்கள் முகாம் பிள்ளைகள் என பாடசாலை சமூகம் அறிமுகம் செய்து வைக்கின்றது.

முகாம் என்ற அடைமொழி எமக்கு வேண்டாம். எங்களது பிள்ளைகள் முகாம்களில் வாழக்கூடாது. அவர்களின் எதிர்காலம் நன்றாக அமைய இந்த அரசாங்கம் எங்களை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற அனுமதிக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியிருந்தார்.

Related Posts