முகமாலை பகுதியில் ராணுவத்தின் கெடுபிடியால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இம் மக்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தினரின் வேலி காரணமாக அவற்றை அமைத்துக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். குறித்த வேலியை தமது காணிகளில் இருந்து சற்று நகர்த்தினால் தமக்கான வீடுகளை அமைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கும் மக்கள், இவ்விடயம் தொடர்பாக முகாமுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரி, கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் முறையிட்டும் எவ்வித பயனும் கிட்டவில்லையென தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, மக்களின் நிலத்தில் இராணுவத்தினர் பயிர் செய்து வருவதோடு, சிற்றுண்டிச்சாலை ஒன்றையும் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல வழியின்றி உள்ளதாக தெரிவிக்கும் மக்கள், ராணுவம் அங்கிருந்து முழுமையாக வெளியேறாவிட்டாலும், வேலியையாவது சற்று நகர்த்தினால் உதவியாக இருக்குமென குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts