முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் அமைத்துள்ள அதியுச்ச போர் யுத்தி மற்றும் கண்ணிவெடி பொறியமைப்பை கண்டு மனிதநேய கண்ணிவெடியகற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ந்துபோயுள்ளதாக சம்மந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.தற்போது குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், குறித்த பகுதியில் முன்னரங்கப் பகுதியில் முழுமையாக கண்ணிவெடியகற்ற சுமார் 2 வருடங்கள் எடுக்கும் என அந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், மொத்தமாக கண்ணிவெடியகற்ற சுமார் 7வருடங்கள் எடுக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புலிகள் முன்னரங்கப் பகுதியில் இலகுவில் கண்டறிய முடியாததும், அபாயகரமானதுமான கண்ணிவெடி பொறிமுறையினையும் பதுங்கு குழி அமைப்பினையும் அதையொட்டி கண்ணிவெடிகளையும் வைத்திருக்கின்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றல் சாதாரண விடயமாக இருக்கவில்லை. இது வட கிழக்கில் யுத்தம் நடைபெற்ற வேறு எந்தப் பகுதியிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாகர்கோவில் பகுதியில் கண்ணிவெடியகற்றல் முழுமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து எழுதுமட்டுவாளிலும், தற்போது முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றல் முன்னெடுக்கப்படுகின்றது.
கண்ணிவெடிகளுக்கு மேலாக அதிகம் யுத்தம் இடம்பெற்ற பகுதி என்பதால் பெருமளவு வெடிக்காத வெடிபொருட்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த தரப்புக்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.