முகமாலை பகுதியில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றி சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநாச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள முகமாலை தெற்கு, அம்பளாவளை, இந்திராபுரம், மடத்தடி, நவனிவெளி, இத்தாவில் மேற்கின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முழுமை பெறாத காரணத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலையில் இதனை அண்டிய பகுதிகளிலும், பிறமாவட்டஙகளிலும் வாழ்ந்துவருகின்றனர்.
தற்போது 248 குடும்பங்களைச்சேர்ந்த 900 பேர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாயிரம் ஆண்டு தொடக்கம், யுத்தம் காரணமாக மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில், நீண்டகால போர்முனையாகவும், யுத்த சூனிய பிரசேதமாகவும் காணப்பட்ட இப்பகுதியில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டன.
அத்துடன் வெடிக்காத நிலையில் ஏராளமான வெடிபொருட்களுடன் ஆபத்தான பிரதேசமாகவும் குறித்த பகுதி காணப்படுவதாக மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வெடிபொருட்களை விரைவாக அகற்றி தம்மை மீள்குடியேற்றுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.