யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர இருதய இயக்கி மற்றும் உபகரணங்கள் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான சுகாதார அமைப்பு அவற்றை வழங்கியுள்ளது. இதன்மூலம் இருதய நோயாளிகள் பயனடைவர் என்று போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
இந்தச் சத்திர சிகிச்சையின்போது ஒருவருக்கு மட்டும் பொருத்தப்படும் இதய இயக்கியின் பெறுமதி மூன்று லட்சம் ரூபாவாகும். இந்த அமைப்பின் உதவியின் மூலம் 20 பேருக்கு இங்கு சிகிச்சையளிக்கமுடியும்.
நிரந்தர இதய இயக்கி பொருத்தும் சிகிச்சை முறை யாழ்ப்பாணத்தில் போதனா வைத்தியசாலையில் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 64 பேருக்கு அந்தச் சிகிச்சை அளிக்க சுகாதார அமைச்சு உதவியிருந்தது.
ஆனால் இன்று வரை 70 இதுக்கும் மேற்பட்டோருக்கு அவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் செலவிலேயே அவர்களுக்கான இந்த நிரந்தர இதய இயக்கி கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றது. தற்போது 20 பேருக்கு சிகிச்சையளிக்க இந்த அமைப்பு உதவி செய்துள்ளது என்றார் வைத்திய நிபுணர் லக்ஷ்மன்.