முகக் கவசம் அணிந்தால்தான் ‘ஊரடங்கு பாஸ்’ செல்லுபடியாகும்!!

பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் ஆரம்பமாகும்.

இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும். சேவைகளின் தேவையை கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிந்தால்தான் ‘ஊரடங்கு பாஸ்’ செல்லுபடியாகும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கோவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு யாரை அழைப்பது என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் காலை 10.00 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருதல் மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு, மருந்துப்பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் கோரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 06, புதன் வரை நடைமுறைப்படுத்தப்படுவது முன்னர் போன்று இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரையாகும்.

இம்மாவட்டங்களில் மே 06, புதன் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் – என்றுள்ளது.

Related Posts