மீள் குடியேற்றம் தொடர்பான அதிகாரம் மாகாண சபைக்கு இல்லை: சுமந்திரனுக்கு சுரேஷ் பதில்!

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், அவர்களை மீள் குடியேற்றம் செய்தல் போன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட விடயமாக இருக்கின்றதே தவிர, அவற்றை மாகாண சபையினால் செயற்படுத்த முடியாது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் புரிந்துக்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில், முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் வடமாகாண சபை அசமந்த போக்கை கடைபிடிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்ததாக செய்தி தொடர்பில், தமது கண்டனத்தை தெரிவித்து, சுரேஷ் பிரேமச்சந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழ் மக்களும்கூட இன்னமும் மீளக்குடியேற முடியாத நிலையும், கடந்த இருபத்தைந்து வருடங்களாக அவர்கள் முகாம்களில் வாழக்கூடிய நிலையும், வடக்கில் தொடர்ந்தும் நிலவிவருகிறது. இவர்களின் மீள்குடியேற்றத்திற்காக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பல்வேறு கட்சிகளும் தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், மாகாண சபை மீள்குடியேற்றத்திற்கோ, புனர்வாழ்விற்கோ எதிராக இருக்கின்றது என்று பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ள சுமந்திரன் போன்றோர் கூறுவது ஒரு பொறுப்பற்ற கருத்தாகும்.

யுத்த கால கட்டத்தில் இத்தகைய தவறுகள் நடந்துதான் இருக்கின்றது. ஆனால் யுத்தகாலத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்பொழுது யுத்தம் முடிந்து, முஸ்லிம் மக்கள் மீள்குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். மன்னாரில், வவுனியாவில், முல்லைத்தீவில், கிளிநொச்சியில் மற்றும் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. இவர்களை மீள்குடியேற்றியது தான்தான் என்றும் ரிசாட் பதியுதீன் மார்தட்டிக்கொள்கின்றார். மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிசாத்திற்கு அதனைச் செய்ய வேண்டியது அவருடைய கடமை.

சுமந்திரன், முஸ்லிம் மக்களை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றியதானது ஓர் இன சுத்திகரிப்பு என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறார். இலங்கையில் நடைபெற்ற பல்வேறு கலவரங்களின்பொழுது தென் பகுதியில் இருந்த தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். அதனை ஒரு இனச் சுத்திகரிப்பு என்ற வரையறையின்கீழ் கொண்டுவரமுடியுமா? ஆகவே தவறான கருத்துக்களைக்கூறி தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் மேலும் மேலும் முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கேட்டுக்கொள்கின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts