மீள்குடியேற்ற பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு

Molavi-naimutheenயாழ். மாவட்ட மீள்குடியேற்ற பிரச்சினைக்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் மௌலவி நைமுதீன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற விபரம் திரட்டுவதற்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய மக்களின் விபரங்களை தற்போது திரட்டி வருகிறோம். மேலும், விடுபட்டுள்ள மீள்குடியேற்றம் விடயங்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது. யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவிலுமுள்ள விபரங்கள் திரட்டப்பட்டு, அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் யூ.என்.எச்.ஆர். நிறுவனத்தினர்களுடனும் ஆராயப்பட்டது. இதில் மீள்குடியேற்றத்தில் பிரச்சினைகளின்றி எவ்வகையில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென்பதை விரிவாக ஆராய்ந்துள்ளோம்.

இன்னும் 02 வாரங்களில் திரட்டப்பட்ட தகவல்களை மீளாய்வு செய்து அதிகாரபூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடிவுகள் எடுப்பதற்கான தளமாக இக்கலந்துரையாடல் அமைந்தது’ என்றார்.

இதேவேளை, வலி. வடக்கு பிரதேசங்களில் விரைவில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவருவதாகவும் அங்கு மீள்குடியேற்றம் செய்யப்படுமா? எனவும் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அனைத்து பகுதிகளிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு படையினரிடமிருந்த இடங்களை பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக மீள்குடியேற்றத்திற்காக விடுவித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அதிகமாக இடங்கள் விடுவிக்கப்படலாமெனவும் அவர் கூறினார்.

Related Posts