மீள்குடியேற்ற பணிகளுக்காக 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு! அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

வடக்கு மற்றும் கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் 4464 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதே வேளை இக்காலப்பகுதியில் 2473 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களிலும் 171 உட்பாதைகளும், 29 பாடசாலைகளும் 23 வைத்தியசாலைகளும் 41 முன்பள்ளி பாடசாலைகளும் புனரமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.

மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையபற்றிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வடக்கு கிழக்கு மாகாணங்களில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :

1980 காலப்பகுதியில் வடமாகாணத்திலிருந்து மொத்த தேசிய உற்பத்திக்கு 7 சதவீதமான பங்களிப்பு கிடைக்கப் பெற்றது. எனினும், 2010ம் ஆண்டளவில் இது 3 சதவீதமாக குறைவடைந்தது. 2015ம் ஆண்டளவில் இந்த பங்களிப்பை 15 சதவீதம் வரை அதிகரிக்க முடிந்துள்ளது.

இரண்டு மாகாணங்களிலும் 9 பாரிய அளவிலான நீர்ப்பாசன செயற்திட்டங்களும், 45 சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களும் புனரமைக்கப்படும். இதன் மூலம் கைவிடப்பட்டுள்ள காணிகளில் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்காக விவசாயிகளை ஊக்குவிக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வருடத்தில் இவ்விரு மாகாணங்களில் 11 மாவட்டங்களிலும் வீடமைப்புத் திட்டத்திற்காக 8634 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் கலாசார மத்திய நிலையத்திற்காக 1700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 25 ஆயிரத்து 215 கைதிகளுக்காக 9607 புனர்வாழ்வளிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைதிகளுக்கு இடையில் கையடக்க தொலைபேசி பாவனையை தடுப்பதற்காக தொலைபேசி சமிக்ஞைகளை தடுக்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நகர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் ஏனைய இடங்களில் மீளமைக்கப்படும். இதற்கமைய கொழும்பு, காலி, மாத்தறை, பதுளை, மட்டக்களப்பு, திருகோணமலை, நீர்கொழும்பு, கேகாலை ஆகிய பிரதேசங்களில் இந்த சிறைச்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts