மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மூன்று மாதங்களில் பூர்த்திசெய்யப்படும்: ஜனாதிபதி உறுதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடனான நேற்றை சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக பிராதானிகளுடனான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே பான் கீ-மூன் இலங்கைக்கு வந்துள்ளதாக சில தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அவ்வாறான எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

வடக்கில் உள்ள சிலர் அரசியல் நோக்கங்களுக்காக மீள்குடியேற்ற விவகாரத்தில் மக்களை குழப்பி திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். அவ்வாறே தெற்கில் உள்ள சில தரப்புக்களும் சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துக்ளை பரப்பி வருகின்றன.

வடக்கு மக்கள் தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த சொந்தக் காணிகளைத்தான் கேட்கின்றார்கள் இராணுவ முகாம்களை தங்களிடம் தரச் சொல்லிக் கேட்கவில்லை. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இரண்டு தரப்பிலும் மக்களை தவறாக வழிநடத்துகின்ற செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாகும்.

ஆனால் இவ்வாறானவர்களின் முயற்சிகளை தோல்வியடையச் செய்யும் வகையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

Related Posts