மீள்குடியேற்றத்திற்கு போதுமான நிதி இல்லாமையினால் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நடாளுமன்ற நிதிக்குழு நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தது.
இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கலந்துரையாடலில், நிதிக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் விசேடமாக வலி, வடக்கு பிரதேசத்தில் மக்களுடைய காணிகள் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளபோதும், அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு போதுமான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை.
வலி,வடக்கில் 1600 குடும்பங்களுக்கு சொந்தமான 823 ஏக்கர் நிலம் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் மீள்குடியேறவுள்ள மக்களுக்காக 1640.83 மில்லியன் ரூபாய் நிதி தேவை என கணிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கம் வெறும் 700 மில்லியன் ரூபாய் நிதியையே வழங்கியுள்ளது.
இதற்கு முன்னரும் அரசாங்கம் 226 மில்லியன் ரூபாய் நிதி இன்னும் விடுவிக்கவில்லை. எனவே மீள்குடியேற்ற தேவைகளுக்காக 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். என்பதை நாடாளுமன்ற நிதிக்குழு பரிந்துரை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.