மீள்குடியேற்றம் தொடர்பில் மாகாணக் கொள்கை

வட மாகாணத்தில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான தேவைகளைக் கண்டறிவதற்காக மாவட்ட மட்டத்திலான கூட்டம் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளது. அத்துடன், மீள்குடியேற்றம் தொடர்பிலான மாகாண கொள்கை உருவாக்கப்படுவதாகவும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் அதனைக் கையளிக்கவுள்ளதாகவும் வட மாகாண புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் 5 மாவட்டங்களிலும் உள்ள மீள்குடியேற்ற தேவைகள் மற்றும் சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான மாவட்ட மட்டத்திலான கூட்டங்களையும் மாகாண மட்டத்திலான கூட்டங்களையும் நடத்தி, மாகாணத்தின் மீள்குடியேற்ற தேவைகள் தொடர்பில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் என, அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீள்குடியேற்றம் மற்றும் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாக தெரிவித்த அவர், 5 மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்களிடமிருந்து மீள்குடியேற்றம் தொடர்பான தகவல்களையும் திரட்டியுள்ளதாகவும் படையினர், பொலிஸார், கடற்படையினர், வசமுள்ள காணிகள் மற்றும் மீள்குடியேற்ற வேண்டிய மக்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts