“முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் அபகரித்துள்ள பொதுமக்கள் காணிகளை மீளக் கைளித்தல், மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்தல் குறித்து எதிர்க்கட்சியத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
முல்லைத்தீவு, கேப்பாபிலவு மாதிரிக்கிராம மக்கள் படையினர் கையகப்படுத்தியுள்ள தமது 520 ஏக்கர் காணிகளை மீளக்கையளிக்க வேண்டும், தம்மை தமது சொந்த இடத்தில் மீள்குடியமரத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் கேப்பாபிலவு மாதிரிக் கிராம பிள்ளையார் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக குறித்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் வேலாயுதப்பிள்ளை தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரி மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அக்கிராம மக்களும் அந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், க.சிவமோகன் மற்றும் வடக்கு மாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களான ரவிகரன், சிவநேசன் ஆகியோர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழியை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறுகையில்,
“குறித்த மக்களின் 520 ஏக்கர் காணியை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து தற்போது ஏழு ஆண்டுகளை கடந்திருக்கின்ற தருணத்திலும் பொதுமக்களின் காணிகள் முழுமையாக கையளிக்கப்படாத நிலைமையே உள்ளது.
வலிகாமம், வடக்கு, கிழக்கு, சம்பூர் பிரதேசங்களில் காணிகள் நல்லாட்சி அரசால் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றபோதும் போரின் உக்கிரத்தை உணர்ந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் அவ்வாறான எவ்விதமான நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்காதிருப்பது கவலையளிக்கின்றது.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பங்களிப்பின் மூலம் ஆட்சியில் அமர்ந்த நல்லாட்சி அரசு தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினருக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியின் தலைமையில் கையளிப்பதற்கும் தயாராகியுள்ளது.
தற்போது உண்ணாவிரதமிருக்கும் இந்தக் கேப்பாபிலவு மக்கள் இந்த முல்லை மண்ணை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இங்கே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தவர்கள். சொத்துக்களை, சொந்தங்களை இழந்து மீண்டும் பூச்சியத்திலிருந்த தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் காணப்படுகின்றார்கள்.
உட்கட்மைப்பு வசதிகளின்றி அன்றாடம் அல்லறும் மக்களின் பூர்வீகத்தை அழித்து இராணுவத்தினருக்கு நிரந்தரக் குடியேற்றங்களை மேற்கொள்வது எந்தவகையில் நியாயமாகும். மேலும் பொதுமக்களுக்கு சொந்தமான உறுதிக்காணிகளை இராணுவம் தொடர்ந்தும் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்படுத்தி வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நல்லாட்சியை மையப்படுத்தி ஆட்சியில் அமர்ந்துள்ள புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு நிரந்த தீர்வை வழங்குவதாக உறுதியளித்தே ஆணைபெற்றுள்ளது. ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாது தொடர்ந்தும் காலம்கடத்தும் வகையில் செயற்படக்கூடாது. கடந்த கால அரசின் போக்கை தற்போதைய அரசும் கடைப்பிடிக்குமாகவிருந்தால் மக்கள் நிச்சயம் நல்லாட்சி அரசின் மீதும் அதிருப்தியடைவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, குறித்த விடயத்தை கவனத்தில்கொள்ள வேண்டியது இன்றியமையாதாகின்றது. நாம் இவ்விடயம் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரிடம் காணப்படும் பொதுமக்கள் காணிகளை மீளக் கைளித்தல், மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்தல் குறித்து எதிர்க்கட்சியத் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” – என்றார்.