மீள்குடியேற்றம் குறித்து அரசு சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சி! – சஜீவன்

Sajeepanமீள்குடியேற்றம் தொடர்பில் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அரசின் இந்த ஏமாற்று முயற்சி பலிக்கப்போவதில்லை என வலி வடக்கு மீள் குடியேற்றக் குழு தலைவரும் பிரதேச சபை உப தவிசாளருமான எஸ்.சஜீவன் தெரிவித்தார்.

மீள்குடியேற வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் தகவலும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள கணக்கிற்குமிடையிலேயே அதிக வித்தியாசம் உள்ளதாகவும் சஜீவன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது இதனைத் தெரிவித்த சஜீவன்.

அங்கு மேலும் கூறியவை வருமாறு:-

வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயர்ந்த மக்களையும் மீள்குடியேற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளையும் புதிதாக பதவியேற்ற வடபபகுதி இராணுவத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடியமையுடன் விரைவாக மீள்குடியேற்றம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. மாறாக வலி.வடக்கு மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் வேறு இடத்தில் குடியமர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். சொந்த இடங்களுக்கு மட்டுமே செல்வோம் என அவர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். மக்களை அழைத்துப் பேசிய மாவட்ட இராணுவத் தளபதி தனது ஏமாற்று வேலையைக் காட்டியுள்ளார் எனவும் சஜீவன் மேலும் தெரிவித்தார்.

Related Posts