மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு அருகில் மிதிவெடிகள்!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குபட்ட இந்திராபுரம், முகமாலை ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதும், குறித்த பகுதிகளுக்கு அருகே மிதிவெடிகள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள இம்மக்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தமக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதோடு, தமது பிரதேசத்திற்கு அருகில் காணப்படும் மிதிவெடிகளையும் விரைந்து அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

நிரந்தர வீடுகள் இல்லாத காரணத்தால் பாம்புகள் உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்களின் தொல்லைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கும் இம்மக்கள், இந்நிலையை கருத்திற்கொண்டு தமக்கான நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, எழுதுமட்டுவாழ் தொடக்கம் இத்தாவில் வரை பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதால், ஆபத்தான சூழ்நிலையிலேயே ரயில் கடவையை கடப்பதாக தெரிவிக்கும் மக்கள், இவ்விடயம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

Related Posts