மீள்குடியேற்றத்திற்கு இராணுவமே தடையாக உள்ளது; வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் தொடர்ந்தும் பெருமளவில் நிலைகொண்டுள்ள இராணுவம் உட்பட அரச படையினரே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி டெல் தலைமையிலான பிரதிநிதிகள் வட மாகாண முதலமைச்சரை சந்தித்த போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி டெல் தலைமையிலான ஐ.நா பிரதிநிதிகள் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிவரும் நிலையில் இன்று கைவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யுத்தம் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களையும் இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது அகதிகள் இல்லாத நாட்டை ஸ்ரீலங்கா அரசு முயற்சித்து வரும்வேளை தமிழ் தலமைகளின் ஒத்துழைப்பையும் தாம் எதிர்பார்ப்பதாக ஐ.நா அதிகாரி டெசி டெல் கோரியதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் இந்த நோக்கத்தை அடைய வேண்டுமானால், இராணுவப் பிரசன்னம் உள்ளிட்ட தடைகள் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியதாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள அகதிகளை மீண்டும் அழைத்துவருவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது வரவேற்கத்தக்கதென்றாலும் அவர்களின் வீடமைப்பு மற்றும் கல்வி பொருளாதார வசதிகளையும் கவனத்திற்கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தவேண்டும் என ஐ.நா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts