மீள்குடியேற்றத்தினை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது – வலி. வடக்கு மக்கள்

புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர்.

வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலில் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுடைய காணிகளின் விபரங்கள் மற்றும் மீள்குடியேறுவதற்காக காத்திருக்கும் மக்கள் தொடர்பிலான தரவுகள் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இராணுவத்திடம் காணப்படும் தரவுகளுக்கும், அதிகாரிகள் கையளித்த தரவுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் புதிய தரவுகளை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்திற்கு எந்தவொரு அரச அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதோடு வடமாகாண முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ எவரும் கலந்துகொள்ளவில்லையேனவும் தெரியவருகின்றது.

Related Posts