வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமக்கான வீட்டுத்திட்டம் போன்ற உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் உள்பட வேறுவேறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்ந்தோர் தமக்கான உதவித் திட்டங்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்பட வேண்டிய காலப்பகுதியே நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்ததாவது, “1990ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்கள் மற்றும் வேறுவேறு பகுதிகளில் குடியமர்ந்துள்ள மக்களுக்கும் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கும் வீட்டுத்திட்டம் மற்றும் உதவிப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்கான பதிவுகளை கடந்த மே 31ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த கால எல்லை வரும் ஜூன் 30ஆம் திகதிவரை ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்கியிருக்கும் பகுதி கிராம அலுவலர் ஊடாக அந்த அந்தப் பிரதேச செயலகங்களில் தமது பதிவுகளை முன்னெடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.