“நீண்ட கால இடப்பெயர்வின் பின்னர் சொந்த இடங்களில் மீளக்குடியமரும் போது, நீங்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்கின்றீர்கள். இதனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.” இவ்வாறு நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை வந்த அவர், மக்கள் மீள்குடியமர்வுக்கு கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட வளலாய்க்குச் சென்றார். அங்கு மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இலங்கைக்கு மீள வரக் கிடைத்தமையிட்டு மகிழ்கிறேன். இலங்கை என்பது எனக்கு விஷேமானது. நோர்வேயின் தூதுவராக ஏழு ஆண்டுகளுக்கு முன் கிடைத்த நல்ல நினைவுகளை அடிக்கடி எண்ணிப் பார்ப்பதுண்டு. புதிதாக விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதியில் நோர்வேஜியத் தூதராலயத்தின் எனது சகாக்களுடனுடன் ஐ.நா.வின் அலுவலர்களுடனும் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி.
ஒரு நோர்வேஜியனாக, மீன்பிடித்துறை என்பது எனது இதயத்துக்கு நெருக்கமானது. ஏனெனில், மீன்பிடித் தொழிற்றுறையானது நோர்வேயின் ஏற்றுமதி, வருமானம் மற்றும் தொழில்வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் பங்களிப்பதனூடு நோர்வேஜியப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.
நோர்வே இலங்கையுடன் நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. நோர்வே வடக்கு மாகாணத்தில் உள்ள மீன்பிடித் துறைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் உதவியது. ‘சீனோர்’ என்று பொதுவில் அழைக்கப்பட்ட அந்த ஒத்துழைப்பு, அன்று சிலோன் என்று அறியப்பட்ட இலங்கை, நோர்வே ஆகியன இணைந்த ஒரு முயற்சியாகும். உங்கள் சிலருக்கு இது நினைவிருக்கும்.
நோர்வேயின் உதவியுடன் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் தீவின் கரையோரப் பகுதிகளெங்கும் முன்னெடுக்கப்பட்டன. சீனோர் நிதியுதவியில் காரைநகர், குருநகர் ஆகிய பகுதிகளில் படகுகளைக் கட்டுவதற்கும் மீன்பிடி வலைகளை உருவாக்குவதற்குமான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாண்டின் முற்பகுதியில் மீன்பிடித் துறையில் மேலதிக உதவிகளை நாடி மீன்பிடி அமைச்சால் வைக்கப்பட்ட கோரிக்கையை நோர்வே ஏற்றுக் கொண்டுள்ளது.
அண்மைக் காலங்களில், வடக்கு மாகாணத்தில் உள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களையே எமது உதவிகள் முக்கியமாக இலக்குவைத்தன. பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதார வாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன் ஐ.நா அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புகளின் ஊடாகவே பெரும்பகுதியிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி அவர்களது வாழ்வை மீளத் தொடங்குவது மிக முக்கியமானது. அதனாலேயே நோர்வேஜிய அரசு மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளை மீளத் தொடங்குவதற்கும் மீள்குடியேற்ற செயற்பாட்டை ஊக்குவிக்கவும் நிதி உதவியினூடு ஆதரவு வழங்கத் தீர்மானித்தது.
இங்கு வளலாயிலும் அதை அண்டிய கிராமங்களிலும் தெரிவு செய்யப்பட்ட சமூகங்களில் மீன்பிடி, விவசாயம், கால்நடை, மாற்று வருமானம் ஈட்டும் செயற்பாடுகள் ஆகியவற்றில் வாழ்வாதார வாய்ப்புகளுக்கு நாம் துணைபுரிகிறோம். மிக நீண்டகாலம் இடம்பெயர்ந்து முதலில் மீளக் குடியேறியவர்களில் நீங்களும் அடக்கம் என்பதை நாமறிவோம்.
உங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி வரும்போது சவால்களை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பது புதிய இலங்கையின் முக்கியமான சின்னமாகும்.
உங்கள் வாழ்வாதாரங்களை உடனடியாக ஆரம்பிக்கக் கூடியவாறான படகுகளும், என்ஜின்களும், மீன்பிடி கருவிகளும்;, விவசாய உபகரணங்களும் நீங்கள் பெற்றுக் கொள்வதை பார்க்கக் கிடைத்தமையிட்டு மகிழ்வடைகிறேன்.
உங்கள் பூர்வீகப் பிரதேசங்களில் உங்கள் வாழ்க்கையை உங்களால் மீண்டும் நிறுவ முடியும் என்று மனமார நம்புகின்றேன். கடின உழைப்பினூடு பங்களித்து உங்கள் சொந்த இடங்களில் உங்கள் சமூகத்தையும் வாழ்வையும் மீளக் கட்டியெழுப்புவீர்கள் என நாம் நம்புகிறோம்” – என்றார்.