மீளச் செலுத்த முடியும் என்றால் கடன் பெற்று தொழில் செய்யுங்கள்; நெல்லியடி வணிகர் கழகம் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்து

கடன்களைப் பெற்றுத் தொழில் செய்யும் போது கடனுக்கு உரிய வட்டியும் செலுத்தி இலாபமும் கிடைக்குமாயின் கடன்பெற்று தொழில் செய்யலாம். கடனைப்பெற்று அதற்குரிய வட்டியையும் முதலையும் செலுத்த முடியாது என்று தெரிந்தும் கடனைப் பெற்று விட்டு தலைமறைவாகுவது ஒட்டு மொத்த வர்த்தக சமூகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும். எனவே வர்த்தகர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

நெல்லியடி வாணிபர் கழகத் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்.மாவட்டத்தில் இரண்டாவது வளர்ந்து வரும் வர்த்தக நகரமாக நெல்லியடி விளங்குகின்றது. நீண்ட காலமாக எமது வர்த்தகர்கள் நேர்மையாகச் செயற்பட்டு நிதி நிறுவனங்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றனர்.

அண்மைக்காலத்தில் வெளியாரின் ஊடுருவல்களால் வர்த்தக செயற்பாடுகளில் மந்தநிலை காணப்படுகின்றது. வர்த்தகர்கள் இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனைச் சாதகமாக்கி சிலர் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கல் வங்கல் செய்கின்றனர். இவர்கள் தொடர்பில் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இதுவே நெல்லியடிப் பிரதேசத்தில் சில வர்த்தகர்கள் தலைமறைவாகக் காரணம். இதனை அடுத்து யாழ்.மாவட்ட வர்த்தக சங்கத்தால் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. இதற்கு அமைவாக செயற்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

ஒரு பொருளை கொள்முதல் செய்து அதற்காகப் பெறும் கடன்களை வட்டியுடன் இலாபமும் சேர்த்து கிடைக்கப் பெறுமாயின் அந்தக் கடனைப் பெற்று அந்தத் தொழிலை மேற்கொள்ளலாம்.

வட்டியையும் முதலையும் செலுத்த முடியாது என்று தெரிந்தும் கடனைப் பெற்று விட்டு வட்டியும் முதலும் செலுத்த முடியாமல் தலைமறைவாவதால் ஒட்டு மொத்த வர்த்தக சமூகத்தினருக்கே அவமானம் ஏற்படுகின்றது. எனவே சிந்தித்து வியாபாரம் மேற்கொள்ளவும் என்றுள்ளது.

Related Posts