மீற்றர் வட்டி, பெருந்தொகைப் பணச்சீட்டுக்கள் போன்ற பாதுகாப்பற்ற நிதியியல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது மக்களுக்கு பாதுகாப்பானது என்று இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் சண்.குறிஞ்சிதரன் தெரிவித்தார்.
வர்த்தகர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக சங்கானைப் பிரதேச வர்த்தகர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே குறிஞ்சிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஈடுசெய்வதற்கு மீற்றர் (அதிகூடிய) வட்டிக்குப் பணம் பெறுவதாகவும், அதனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுகின்றபோது பலர் தலைமறைவாவதாகவும் வர்த்தகப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
மீற்றர்வட்டி, பெருந்தொகைப் பணச்சீட்டு என்பன பாதுகாப்பற்ற நிதியியல் கொடுக்கல் வாங்கல்கள் இந்த நடவடிக்கைகளால் யாழ்.மாவட்டத்தில் பலர் பாதிப்புக்குள்ளானதை மத்திய வங்கி அவதானித்துள்ளது.
இவ்வாறான பாதுகாப்பற்ற கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று சண்.குறிஞ்சிதரன் வலியுறுத்தினார்.