எமது பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் அனைத்தும் இந்த மீன்பிடித் தொழிலை நம்பியே உள்ளது என முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாயாறு பகுதியின் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக குறித்த மீனவ குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.
தொடர்ந்து தெரிவித்த மீனவக் குடும்பத்தினர், ”வாழ்வாதாரத்திற்கான எமது சொத்தாக இருந்த மீனவ உபகரணங்கள் அனைத்தும் இன்று அழிந்துபோயுள்ளன.
எட்டு வாடிகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
நாம் குடிவந்த காலப்பகுதியிலிருந்து பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். எமது பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் அனைத்தும் இந்த மீன்பிடித் தொழிலை நம்பியே உள்ளது. எனவே, எமக்கு நல்லதொரு தீர்வு கிட்ட வேண்டும் என நாம் கோருகின்றோம்” எனத் தெரிவித்தனர்.