மீனவர் பிரச்னைக்கு மனிதாபிமானத் தீர்வு: மோடி-ரணில் பேச்சுவார்த்தையில் முடிவு

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகி, தீர்வு காண்பது என தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

india-meeting

இலங்கை பிரதமராக நான்காவது முறையாக ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அவர் இந்தியாவுக்கு திங்கள்கிழமை மாலையில் வருகை தந்தார். தில்லி பாலம் விமான நிலையத்தில் அவரை மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து, தில்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி – ரணில் விக்கிரமசிங்க இடையிலான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இரு நாட்டு தொழில், வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உறவுகள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை, இலங்கைத் தமிழர் விவகாரம், கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதன் முடிவில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

இலங்கையில் மாற்றம், சீர்திருத்தம், நல்லிணக்கம், வளர்ச்சி ஏற்பட வசதியாக இந்தியா ஆதரவாக இருந்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும், ஒருங்கிணைந்த இலங்கையில் சம வாழ்வு, நீதி, மதிப்பு ஆகியவற்றுடன் வாழும் சூழலை தற்போதைய அரசின் தலைமை உருவாக்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண, இரு தரப்பு மீனவர் சங்கங்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள, இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வாய்ப்புகள் குறித்து அவருடன் விவாதித்தேன். இந்தப் பிரச்னைக்கு மனிதாபிமானத்துடன் தீர்வு காண இரு தரப்பிலும் முடிவு செய்தோம்’ என்றார் நரேந்திர மோடி.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:

மனிதாபிமானத்துடன் இரு நாட்டு மீனவர் பிரச்னை அணுகப்படும். இரு நாடுகளிடையிலான நல்லுறவு புதிய உச்சத்தைத் தொடும். பயங்கரவாத எதிர்ப்பு, கடலோரக் காவல் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் இலங்கை இணைந்து செயல்படும். இலங்கையில் அனைத்துத் தமிழர்களும் சமநிலையில் வாழ நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேசி வருகிறோம். பொருளாதார விவகாரம், வர்த்தகம், தொழில் முதலீடு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நிரந்தர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன்’ என்றார் ரணில் விக்கிரமசிங்க.

ரணில் விக்கிரமசிங்கவை அவர் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, சுரேஷ் பிரபு, எரிசக்தித் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தனித் தனியாக செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவர் புதன்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

இலங்கை ராணுவத்தினருக்கான இந்தியாவின் பயிற்சி தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி மேலும் கூறியதாவது: “இலங்கை உள்கட்டமைப்பு, ரயில்வே, எரிசக்தி, போக்குவரத்துத் துறைகளில் இந்தியா தொழில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டேன். பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, பயங்கவாத ஒழிப்பு, இலங்கை ராணுவத்தினருக்கான பயிற்சி ஆகிய நடவடிக்கைகள் வரும் காலங்களில் தீவிரப்படுத்தப்படும்’ என்றார்.

நான்கு ஒப்பந்தங்கள்

இந்தியா-இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் விவரம்:
1 சார்க் நாடுகளுக்கான செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதில் ஒத்துழைப்பு.
2 இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகள், என்ஜிஓக்கள், அறக்கட்டளைகள், கல்வி, தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் நிறைவேற்றப்படும் சிறிய வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி வழங்க வகை செய்யும் உடன்படிக்கையைப் புதுப்பித்தல்.
3 வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்.
4 இலங்கையில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்துதல்.

Related Posts