மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று(திங்கட்கிழமை) மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்) வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும்கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.

இன்று முதல் எதிர்வரும் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும், இன்று முதல் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது உயர் இடர் கொண்டது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts