கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று இடம்பெறவுள்ளது.
மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்தோருக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இப் பாரிய சேதத்திற்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என குறித்த பிரேரணையில் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வருகின்ற குப்பை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டை பெற்றுக்கொடுப்பதோடு, அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் 32 பேர் உயிரிழந்ததோடு, நூற்றிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி சந்திரதாச தலைமையில் தனிநபர் விசாரணைக்கு குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது