பெற்றோலிய ஊழியர்கள் சங்கமானது மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய சங்கத்தின் இணைப்பாளர் பீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த காரணத்தினை முன்வைத்து பெற்றோலிய ஊழியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தால் பல்வேறு பகுதிகளிலும் எண்ணெய் விநியோகங்கள் தடைப்பட்டு மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
அதேபோன்று அண்மையில், பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக இலங்கைமுழுதும் ஸ்தம்பிதம் அடைந்ததோடு பல்வேறு அரசியல் ரீதியான விமர்சனங்களையும் அரசு சந்தித்தது.
இந்தநிலையில் மீண்டும் பெற்றோலிய சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்துள்ள விடயம் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.