உலகில் தோன்றிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் இருவராகக் கருதப்படும் இலங்கையின் முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோண் ஆகியோரின் பெயரைத் தாங்கிய வோண் – முரளி கிண்ணம், இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரின் வெற்றியாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளது.
இதுவரையில் 3 தொடர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவை மூன்றிலுமே அவுஸ்திரேலிய அணி வென்றிருந்தது. இம்முறை இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடரைச் சமப்படுத்தினாலேயே, இக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா, தன்வசம் வைத்துக் கொள்ளும்.
இலங்கையினதும் அவுஸ்திரேலியாவினதும் நட்சத்திர வீரர்களின் பெயரை இக்கிண்ணம் தாங்கியிருந்தாலும், இலங்கை சார்பில் பெயரைக் கொண்ட முரளிதரன், அவுஸ்திரேலிய அணியின் ஆலோசகராகச் செயற்படுகின்றமை, இக்கிண்ணத்தில் காணப்படும் 2 பெயர்களுமே, அவுஸ்திரேலியாவின் பக்கமாக உள்ள நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியாக அவுஸ்திரேலியா உள்ள நிலையில், இலங்கை அணி, 7ஆம் இடத்திலுள்ளது. பாகிஸ்தானுக்கெதிரான தொடரை இங்கிலாந்து வென்று, இந்தத் தொடரை அவுஸ்திரேலியா அணி தோற்றால், முதலிடத்தை அவ்வணி இழக்கும் என்ற நிலை காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.